இந்தோனேசியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்து இருப்பதாக அந்த நாடு செவ்வாய்க்கிழமை (இன்று) இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதி அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகும். இங்கு நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இதுவரை 252 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்த நாட்டின் அரசு நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
மேற்கு ஜாவாவின் சினாஜூர் பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகளவில் மக்கள் தொகை கொண்ட ஜகார்த்தாவில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகரான ஜகார்த்தாவில் நிலநடுக்கம் மிகவும் வலுவாக உணரப்பட்டுள்ளது. உயர்ந்த கட்டிடங்கள் கூட அசைந்துள்ளன. ஆனால் பெரும்பாலான சேதங்கள் சினாஜூர் பகுதியில் நிகழ்ந்துள்ளது. மேலும், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் கட்டிடங்களுக்குள் புதைந்தனர். இன்னும், 31 பேரைக் காணவில்லை. 400க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழப்பு 300 பேர் காயம்; மீட்புப் பணிகள் தீவிரம்!!
அசோசியேட் பிரஸ் வெளியிட்டு இருக்கும் செய்தியில், சினாஜூரில் ஒரு பள்ளி மற்றும் மருத்துவமனை முழுவதும் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பள்ளிக்குள் குழந்தைகள் இருந்ததாகவும், கட்டிடம் குழந்தைகளின் மீது இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அருகிலுள்ள சிஜெடில் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் தெருக்கள் புதைந்துவிட்டதாகவும், அங்கு குறைந்தது 25 பேரைக் காணவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 7,060 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.