Washington : கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்றே கூறலாம். இந்நிலையில் 20 வயது இந்திய மாணவருக்கு அவரது சொந்தங்கள் மூலமே பெரிய கொடுமை இழைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாத்ரூம் கூட செல்ல முடியாமல் பல மாதங்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 வயது இந்திய மாணவரை போலீசார் மீட்டுள்ளனர். அந்த மாணவரை கொடூரமாக தாக்கி, மூன்று வீடுகளில் அவரை வேலை செய்யும்படி அவரது உறவினர் மற்றும் இருவர் அவரை நிர்ப்பந்தித்த நிலையில் அதிகாரிகள் அவரை மீட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை, செயின்ட் சார்லஸ் கவுண்டியில் உள்ள ஒரு கிராமப்புற நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் வெங்கடேஷ் ஆர் சத்தாரு, ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா மற்றும் நிகில் வர்மா பென்மட்சா ஆகியோரை கைது செய்தனர். இந்த சூழலில் நேற்று வியாழக்கிழமை அவர்கள் மீது மனித கடத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது.
undefined
அந்த பகுதியில் வசித்து வந்த அடையாளம் தெரியாத நபர், அந்த இந்திய மாணவர் படும் துயரங்களை கண்டு 911 என்ற அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற போலீசார் மூவரை கைது செய்து, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த 20 வயது இந்திய மாணவரை மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் அதே நேரத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள பல எலும்பு முறிவுகளுக்காக இப்பொது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அவரது முழு உடலையும் ஆய்வு செய்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக, வழக்கறிஞர் ஜோ மெக்கல்லோக் கூறினார்.
ஏழு மாதங்களுக்கும் மேலாக, அந்த மாணவர்கள் அவர்கள் கட்டிடத்தின் ஒரு அடித்தளத்தில் பூட்டி வைத்து, குளியலறைக்கு கூட அவருக்கு அணுகல் தராமல், சரியாக கட்டிமுடிக்கப்படாத தரையில் தூங்கும்படி கட்டாயப்படுத்தினர், என்று கைதான மூவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மின்சார கம்பி, PVC குழாய், உலோகக் கம்பிகள், மரப் பலகைகள், குச்சிகள் மற்றும் ஒரு சலவை இயந்திரத்திற்கான நீர் விநியோகம் செய்யும் குழாய் ஆகியவற்றால் அவர் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.