Prime Minisiter Modi in Dubai : ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் உலக பருவநிலை உச்சி மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்கின்றனர். நமது பாரத பிரதமர் மோடி அவர்களும் தற்போது துபாய் சென்றுள்ளார்.
இந்த முக்கிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அவர்கள் துபாய் புறப்பட்டு சென்றார், அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய அவருக்கு, அந்நாட்டு பட்டத்து இளவரசர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், விமான நிலையத்தில் கூடியிருந்த துபாய் வாழ் இந்திய மக்கள், பிரதமர் மோடிக்கு கை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச அளவில் பெட்ரோலிய எரிபொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக இந்த பூமி பந்தானது வெப்பம் அடைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே உலகம் தொடர்ச்சியாக வெப்பமாவதை தடுக்கவும், வரலாறு காணாத அளவில் ஏற்படும் வறட்சிகளை தடுக்கவும், காட்டுத் தீ, வெள்ளம் போன்ற பெரும் இயற்கை சீற்றங்களில் இருந்து காக்கவும் இந்த உச்சி மாநாடு தற்பொழுது நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த உச்சி மாநாட்டில் முக்கிய பங்குவகிக்கவிருக்கும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய 21 மணி நேர பயண விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த 21 மணி நேரத்தில் நான்கு முக்கிய இடங்களில் அவர் இந்த பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கையை, உரையாக வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காலநிலை நிகழ்வுகள் குறித்த இரண்டு சிறப்பு முன்னெடுப்புகளையும் அவர் இந்த மாநாட்டின் போது வெளியிட இருக்கின்றார். மேலும் துபாய் சென்றிருக்கும் பிரதமர் மோடி, இருநாட்டு சந்திப்புகளில் ஈடுபட உள்ளார். இதில் சுமார் ஏழு தலைவர்களை அவர் சந்தித்து பேசவிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்த மாநாட்டிற்காக அங்கு குலுமியுள்ள உலகத் தலைவர்களுடன் பல்வேறு சந்திப்புகளையும் அவர் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த 21 மணி நேரம் பம்பரமாக சுழல உள்ள பிரதமர் மோடி அவர்கள் இந்த பருவநிலை மாநாட்டினை முடித்து விரைவில் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.