இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை இடைநீக்கம் செய்யக் கோரிய எதிர்க்கட்சியின் கோரிக்கையை சிங்கப்பூர் நாடாளுமன்றம் நிராகரித்தது. எம்.பி.க்கு எதிரான ஊழல் விசாரணை முடிந்த பின்னர் இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருந்தது. தற்போது விசாரணை நடந்து வருகிறது. நேற்று (செவ்வாயன்று) நடைபெற்ற இரண்டு மணி நேர விவாதத்தின் போது, ஈஸ்வரன் மீது தொடுக்கப்பட்டு இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் எம்பி பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று சபைத் தலைவர் இந்திராணி ராஜா கூறியதாக சேனல் நியூஸ் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஜூலை மாதம் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். எஞ்சிய அமர்விற்கு ஈஸ்வரனை நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி கோரிக்கை வைத்து இருந்தது.
இதற்குப் பதிலளித்த இந்திராணி ராஜா, ''ஈஸ்வரனுக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகளின் முடிவு தெரிந்த பின்னர், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பரிசீலிக்க வேண்டும்'' என்று பதில் அளித்தார். எதிர்க்கட்சியின் கோரிக்கையையும் நிராகரித்தார்.
ஆளும் எம்பிக்கள் ஈஸ்வரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே சமயம் சுயேட்சை எம்பிக்கள் இருவர் தங்களது சொந்த கோரிக்கைக்காக வாக்களித்துக் கொண்டனர். எம்பியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும்போது, தனது சொந்த தொகுதியில் தனது கடமைகளை செய்யாதபட்சத்தில் எம்.பிக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும் என்று சுயேட்சை எம்பிக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதை ஆதரித்து அவர்கள் வாக்களித்துக் கொண்டனர். ஊழல் குற்றச்சாட்டை அடுத்து ஈஸ்வரனிடம் இருந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அரசு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புகளை ஒப்படைத்த ஹலீமா - சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக பொறுப்பேற்றார் தர்மன் சண்முகரத்தினம்!