
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் கேரளாவைச் சேர்ந்த லி மேக்ஸ் ஜாய் என்ற இளைஞரை 5 ஆஸ்திரேலிய இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் புத்தபள்ளியை சேர்ந்தவர் லி மேக்ஸ் ஜாய் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் டிரைவராக பணியாற்றி வருகிறார்..
அண்மையில், அங்குள்ள ஒரு உணவகம் ஒன்றில் காபி குடிக்க ஜாய் சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் உள்ளிட்ட 5 ஆஸ்திரேலிய இளைஞர்கள் அவரிடம், நீ இந்தியனா? என்று கேட்டவாறே சரமாரியாக தாக்கினர்.
உணவக நிர்வாகிகள் போலீசுக்கு போன் செய்ய முயன்றதால் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ஆனால் உணவகத்தினர் போன் செய்யாததை தெரிந்துகொண்டு சிறிதுநேரம் கழித்து மீண்டும்அங்கே வந்த அவர்கள் ஜாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கினர்.
இதில் பலத்த ரத்தகாயம் அடைந்த ஜாய் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜாய் தன் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல் குறித்து ஹோபர்ட் நகர போலீசில் புகார் செய்தார். இந்த பிரச்சினையில் இந்திய வெளியுறவுத்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஜாய் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதில் இருந்து, அங்கு இந்தியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். அங்கு இனவெறி தலைவிரித்தாடுகிறது என அமெரிக்க வாழ் இந்தியர்கள் அச்சம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்தியர்கள் தாக்கப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.