2017ஆம் ஆண்டு 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ரிஷி ஷாவின் அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தின் மோசடி வேலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கத் தொழிலதிபர் ரிஷி ஷா. 2006ஆம் ஆண்டு அவுட்கம் ஹெல்த் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் ரிஷி ஷா. மருத்துவரின் மகனான இவர் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு படித்துவிட்டு, இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.
மருத்துமனைகள், மருத்துவர்களின் அறைகளில், சுகாதார விளம்பரங்களை ஒளிபரப்பும் இந்த நிறுவனம், பிரபலமான பல மருத்துவ நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளில் நன்கு வளர்ச்சி அடைந்த நிறுவனமாக உருவானது. 2011ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து ஜம்ப்ஸ்டார்ட் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார்.
தொழில்கள் வெற்றிகரமாக நடந்துவந்ததால் 2016ஆம் ஆண்டில் ரிஷி ஷாவின் நிகர சொத்து மதிப்பு 4 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்தது. 2017ஆம் ஆண்டு 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தின் மோசடி வேலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அதைத் தொடர்ந்து கோல்ட்மேன் சாக்ஸ், ஆல்பாபெட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு தொடர்ந்தன. நிறுவனத்தின் இணை நிறுவனரான ரிஷி ஷா, 12 க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
2023ஆம் ஆண்டு ஏப்ரலில் மற்ற இணை நிறுவனர்களான பிராட் பர்டி, ஷ்ரதா அகர்வால் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த அமெரிக்க நீதிமன்றம், ரிஷி ஷாவின் விளம்பர ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் (அதாவது சுமார் ரூ.8,300 கோடி) மோசடி செய்திருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள், பிராட் பர்டிக்கு 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
மிகப்பெரிய நிறுவனங்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த மெகா மோசடி அமெரிக்காவையே உலுக்கியது. இந்தப் பணமோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரிஷி ஷாவுக்கு ஏழறை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.