இந்தியா இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில், பீகாரின் பாட்டியாலா சி.ஜே.எம் நீதிமன்றத்தில் சீனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தகவல்களை மறைத்து வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாகக் கூறி சீன அதிபர் ஜி ஜின் பிங் மீது பீகார் மாநிலம் பாட்டியா சி.ஜே.எம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது, சுமார் 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 73 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கிட்டத்தட்ட 4 லட்சத்தி 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த ஆபத்தான வைரஸ் காரணமாக இந்தியாவில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றுக்கு சீனா தான் காரணம் எனவும், சீனா இந்த வைரஸை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும் ஆனால் அது அப்படி செய்யவில்லை என்றும், வேண்டுமென்றே சீனா இந்த வைரஸ் தொடர்பான தகவல்களை மறைத்துவிட்டது என்றும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் இந்த வைரஸ் வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்கக்கூடும் எனவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. வைரஸ் விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆஸ்திரேலியா தொடர்ந்து வலியுறுத்திவருவதுடன், உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில், அதற்கான தீர்மானத்தையும் முன்மொழிந்துள்ளது. அதேபோல், தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு, சீனா இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜெர்மனி, பொருளாதார இழப்பீடு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியா இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில், பீகாரின் பாட்டியாலா சி.ஜே.எம் நீதிமன்றத்தில் சீனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாட்டியாலா நீதிமன்ற வழக்கறிஞரும் மற்றும் சமூக ஆர்வலருமான முராத் அலி என்பவர் சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்ட இன்னும் பிற அதிகாரிகளின் மீது பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தகவல்களை மறைத்ததாகவும், இந்தத் தொற்று நோய் உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்ததாகவும் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள முராத் அலி, ஊடகங்களில் வெளியான செய்தி மற்றும் மின்னணு வாயிலாக கிடைத்த பல்வேறு தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜி ஜின் பிங் மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும், அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சாட்சிகளாக இணைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது IPC சட்டப்பிரிவுகள் 269, 270, 302, 307, 504 மற்றும் 120b உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.