ஆப்கானிஸ்தான் நிலநடுக்கும்... அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்.. பிரதமர் மோடி அறிவிப்பு..!

By Kevin KaarkiFirst Published Jun 23, 2022, 12:02 AM IST
Highlights

இன்று காலை ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். மேலும் இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.

“ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த கடின சூழலில் சிக்கித் தவிப்போருக்கு துணையாக இந்தியா நிற்கும். முடிந்த வரை மிக வேகமாக நிவாரண பொருட்களை அனுப்பவும் இந்தியா தயார் நிலையில் உள்ளது,” என பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். 

இன்று காலை ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்க ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. ஆப்கானிஸ்தான் தென் கிழக்கு பகுதியை அடுத்த கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். கடந்த தசாப்தங்களில் இதுவரை இது போன்ற நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டதே இல்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உயிருடன் மீட்கப்படுபவர்களை ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

click me!