#UnmaskingChina:இந்திய எல்லையில் இரும்பு அரண் அமைத்த 80,000 ராணுவ வீரர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 3, 2020, 9:18 PM IST
Highlights

எல்லையில் மே மாதத்தில் பதற்றம் தொடங்கியவுடனேயே உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து இரண்டு  மலையேற்ற போர் படை பிரிவுகள் வடக்கு பிராந்தியத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.
 

உண்மையான எல்லைக்கோட்டு வரிசையில் சீனா நாளுக்கு நாள் தன் படைகளை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவமும் சீனாவுடனான எல்லைக்கோட்டு வரிசையில் அதிக அளவில் படைகளை குவித்து வருகிறது.  ஜூன் 15 ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் வன்முறை மோதல் சம்பவத்தையடுத்து கிழக்கு லடாக் பகுதியில் 4 படைப்பிரிவுகளை இந்தியா முன்னெச்சரிக்கை நடவடக்கையாக நிலை நிறுத்தியுள்ளது. கடந்த மே மாதத்திற்கு முன்பு இந்த பகுதியில் இந்திய ராணுவத்தின் ஒரு படைப் பிரிவினர் மட்டுமே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து, இந்திய ராணுவம் கிழக்கு லடாக்கில் மிகப்பெரிய ராணுவ பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அங்கு நான்கு படைப்பிரிவுகள்  தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  ஒரு பிரிவில் குறைந்தது 15 முதல் 20 ஆயிரம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாதுகாப்புத்துறை ஆதாரங்களின் படி உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாற்றப்பட்ட புதிய படைப்பிரிவு கிழக்கு லடாக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதனுடன் பீரங்கிகளும் லடாக் விரைந்துள்ளன. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி முழுவதும், சீனா தனது துருப்புகளை அதிகப்படுத்தியுள்ளதையடுத்து இந்தியா இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏனெனில் திடீரென மோதல் ஏற்பட்டு அதில் எந்த பகுதியையும் இழந்து விடக்கூடாது என்பதில் இந்திய ராணுவம் மிகத் தீவிரமாக இருந்து வருவதுடன்,  சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தயாராகி வருவதும் அதற்கு காரணம்.  லடாக் சீனா இடையே 856 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லைக் கோடு அமைந்துள்ளது,  இது கரகோரம் பாஸ் முதல் தெற்கு  லடாக்கின்  சுமூர் வரை உள்ளது. கரகோரம் பாஸ் முதல் தவுலத் பேக் ஓல்டி, டெப் சாங் சமவெளி, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்கொங் த்சோ ஏரி, டெம் சோ ஹோக் , கெய்ல் மற்றும் சுமூர் வரையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் சீனத் துருப்புகள் ஊடுருவ வாய்ப்புள்ளது. எனவே எல்லையில் மே மாதத்தில் பதற்றம் தொடங்கியவுடனேயே உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து இரண்டு  மலையேற்ற போர் படை பிரிவுகள் வடக்கு பிராந்தியத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன. 

இந்த இரண்டு பிரிவுகளின் படையினரும்  கிழக்கு லடாக்கில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் வெவ்வேறு முக்கிய இடங்களிலும் இப்படைப்பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளனர், கடந்த இரண்டு மாதங்களாக இரு நாட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அதில் எல்லைப் பதற்றம் குறையவில்லை, மேலும் சீனா தனது படைகள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை எல்லையில் அதிகரித்து வருகிறது என தகவல்கள் கிடைத்ததை அடுத்து,  எல்லைப்பகுதிகளில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. எனவே மே மாதத்திற்கு முன்னரே எல்லை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ராணுவப் பிரிவு சியாச்சின் முதல் சுமூர்  வரை முழு பகுதியையும் கண்காணித்து வருகிறது. மேலும் லேவைத் தளமாகக் கொண்ட 14வது கார்பஸ் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளை கண்காணித்து வருகிறது. அதேபோல் 8வது படைப் பிரிவு கார்கில் மற்றும் டிராஸின் எல்லைப்  பகுதிகளையும் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பை பெற்றுள்ளது. அதேபோல் மூன்றாவது படைப்பிரிவு சீனாவை ஒட்டியுள்ள எல்லையில் கண்கொத்தி பாம்பாக இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 
 

click me!