உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக கூறி அமெரிக்கா இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக கூறி அமெரிக்கா இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இதுவே முதல் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக ஆதரவளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் முதன்முறையாக இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. இதனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் என்றும் கூறப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை என்பது ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 26ம் தேதியன்று உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘யுஎஸ் ஸ்பெஷல் - 301’ என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில், ‘அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது. ஏற்கனவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த கருப்புப் பட்டியலில் உள்ளன.
தற்போது இந்தியாவை முதன்முறையாக அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதால், இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரில் அமெரிக்காவிற்கு இந்தியா ஆதரவு அளிக்காததால், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளதால், இனி வரும்காலத்தில் இந்தியா மீது அமெரிக்கா அடுத்தடுத்த பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் கூறுகையில், அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில், எங்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்தியா உட்பட 7 நாடுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நாடுகள் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.