
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பை ஐ.நா. வின் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க ஐ.நா. அதிகாரிகளை சந்தித்து ஆதாரங்களை வழங்கிஇந்திய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற TRF மீதான நடவடிக்கையை வலியுறுத்தி, பாகிஸ்தானின் பினாமி பயங்கரவாதத்தைத் தடுக்க இந்தியா முயற்சிக்கிறது.
நியூயார்க்கில் புதன்கிழமை ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் (UNOCT) மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் நிர்வாக இயக்குநரகம் (CTED) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளை இந்திய தூதுக்குழு சந்தித்தது. லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை (TRF) ஐ.நா.வில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க இந்தியா தனது ராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய தொழில்நுட்பக் குழு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா. தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு அமைப்பான TRF, இந்தக் கொடிய தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
பஹல்காம் படுகொலையில் TRF-ன் பங்கு குறித்த ஆதாரங்கள் மற்றும் பொருட்களை இந்தியக் குழு சம்பந்தப்பட்ட ஐ.நா. அமைப்புகளுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச தளங்களில் பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாத அமைப்புகளை பொறுப்பேற்க வைப்பதற்கான இந்தியாவின் பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா கடுமையான பதிலடி கொடுப்பதாக சபதம் செய்தது. மே 7 ஆம் தேதி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தொடர் துல்லிய தாக்குதல்களை இந்திய முப்படை மேற்கொண்டு இருந்தது. இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடிப் பொறுப்பிலிருந்து விலகி இருக்க LeT உருவாக்கிய ஒரு நிழல் அமைப்பு TRF என்று நீண்ட காலமாக சந்தேகிக்கப்பட்டு வந்தது. 1267 தடைகள் குழு, ISIS மற்றும் அல்-கொய்தா தடைகள் குழு என்றும் அழைக்கப்படுகிறது, 1999 இல் UNSC தீர்மானத்தின் கீழ் ISIS, அல்-கொய்தா மற்றும் தொடர்புடைய குழுக்களுடன் தொடர்புடைய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்துவதற்காக நிறுவப்பட்டது. இந்தக் குழு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனி நபர் அல்லது குழுவின் மீது தடைகளை விதிக்கும்.
இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு தனது முதல் உரையில் பிரதமர் நரேந்திர மோடி, அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். வர்த்தகம், பயங்கரவாதம், பேச்சுவார்த்தை ஆகியவை கைகோர்த்துச் செல்ல முடியாது என்றும் தெரிவித்து இருந்தார்.