
மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மாவட்ட ஆட்சியருடன் விவசாயிகள் மோதலில் ஈடுபட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கைது செய்யப்பட்டார்.
தொடர் போராட்டம்
மத்திய பிரதேசத்தின் மேற்கு பிராந்தியத்தில் விவசாயிகள் கடந்த 1-ந்தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சரியான கொள்முதல் விலையை வழங்க வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மண்ட்சோர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, வன்முறை ஏற்பட்டது. வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது, கற்களை வீசுவது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டன.
5 விவசாயிகள் சுட்டுக்கொலை
இதன் தொடர்ச்சியாக வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்தில் ஒரு விவசாயி உயிரிழந்தார். மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பெர்கெட பந்த் பகுதியில் விவசாயிகள் சாலையை மறித்தனர்.
சமாதான முயற்சி தோல்வி
பிபல்யா மண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பேசுவதற்காக மண்ட்சோர் மாவட்ட ஆட்சியர் எஸ்.கே. சிங் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் திரிபாதி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தார்கள்.
அப்போது, அவர்களுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன். ஒருசிலர் மாவட்ட ஆட்சியரை தள்ளி விட்டதால் பதற்றமான சூழல் காணப்பட்டது.
உடல்கள் தகனம்
பின்னர் போலீசாரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் இருந்து பத்திரமாக கொண்டு செல்லப்பட்டார். இதன் பின்னர் மண்ட்சோர் மக்களவை தொகுதியின் முன்னாள் எம்.பி.யான காங்கிரஸ் கட்சியின் மீனாட்சி நடராஜன், விவசாயிகளை சந்திக்க வந்தார். அவர் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுத்த போலீசார் மீனாட்சி நடராஜனை கைது செய்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் உயிரிழந்த விவசாயிகள் 5 பேரின் உடல் நேற்று காலை தகனம் செய்யப்பட்டது.
முழு அடைப்பு போராட்டம்
விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து மத்திய பிரதேசம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனால் மாநிலத்தின் மேற்கு பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இருப்பினும், பெட்ரோல் நிலையங்கள், காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய மையங்கள் திறந்தே காணப்பட்டன. இதற்கிடையே, விவசாயிகளை தூண்டி எதிர்க்கட்சிகள் வன்முறையை ஏற்படுத்தி வருவதாக முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.