
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ராஜபக்ஷேவின் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின.
இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 82 ரூபாய் உயர்த்தியுள்ளது பொதுத்துறை நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPC). மேலும், டீசல் விலையில் லிட்டருக்கு 111 ரூபாய் உயர்த்தியுள்ளது.இதனால், இலங்கையில் பெட்ரோல் டீசல் விலை மிக மோசமாக உயர்ந்துள்ளது. இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 420 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 400 ரூபாயாகவும் உள்ளது.
இது இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஏற்கெனவே பணவீக்கம் மிக மோசமாக உள்ளதால் சாதாரண மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே திணறி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், வருங்காலத்தில் மேலும் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !