பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ ரிக்ஷா ஆபரேட்டர்கள் வாகன கட்டணத்தை உயர்த்த இருக்கின்றன.
இலங்கையில் இன்று பெட்ரோல் விலை 24.3 சதவீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது. இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நாணய மதிப்பு சரிவு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் இலங்கை அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி எரிபொருள் விலையை உயர்த்திய நிலையில், தற்போது ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 430 என்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 400 என அதிகரிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
ரூ. 111 அதிகம்:
ஆக்டேன் 92 பெட்ரோல் விலையில் 24.3 சதவீதம் அதவாது ரூ. 82 மற்றும் டீசல் விலை 38.4 சதவீதம் அதாவது ரூ. 111 அதிகரிக்கும் முடிவை மாநில எரிபொருள் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்பரேஷன் எடுத்து உள்ளது.
“எரிபொருள் விலை இன்று அதிகாலை 3 மணி முதல் மாற்றப்படுகிறது. எரிபொருள் விலை நிர்ணயத்தை மாற்றும் மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், விலை மாற்றம் செய்யப்படுகிறது. எரிபொருள் விலை மட்டும் இன்றி போக்குவரத்து மற்றும் இதர சேவை கட்டணங்களையும் மாற்றி அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி ஒவ்வொரு நாள் அல்லது மாதாந்திர அடிப்படையில் விலை மாற்றப்படும்,” என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
தொடர் தட்டுப்பாடு:
விலை மாற்றத்தில் இறக்குமதி, அன்லோட் செய்வது, வினியோகம் செய்வது மற்றும் வரிகள் என அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் இன்றும் பெட்ரோல் பங்க்களில் வரிசை கட்டி நிற்கும் சூழலில் மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ ரிக்ஷா ஆபரேட்டர்கள் வாகன கட்டணத்தை முதல் கிலோமீட்டருக்கு ரூ. 90-ம், இரண்டாவது கிலோமீட்டர் முதல் ரூ. 80 வரை உயர்த்த இருப்பதாக அறிவித்து இருக்கின்றன.