இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 24,000 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி!!

By Dhanalakshmi GFirst Published Sep 1, 2022, 4:44 PM IST
Highlights

பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு 24,000 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்குவதற்கு முதற்கட்டமாக ஒப்புக் கொண்டு இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. உள்நாட்டு உற்பத்தி என்று எதுவும் இல்லாத நிலையில், பெரும்பாலும் இறக்குமதியையே இலங்கை நம்பி இருந்தது. இந்த நிலையில், இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு குறையத் துவங்கியது. அத்தியாவசியப் பொருட்களான பால் பவுடர், பேப்பர், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறியது. இது நாட்டில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி, அரசியல் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது. 55 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடனில் இலங்கை மூழகியுள்ளது. கடனில் இருந்து மீள்வதற்கும், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தை எதிர்நோக்கி இருந்தது. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் தற்போது 24,000 ரூபாய் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் விடுத்து இருக்கும் அறிக்கையில், ''இலங்கைக்கு கடன் கொடுப்பதற்கு ஊழியர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. 48 மாதங்களில் இந்த நிதி வழங்கப்படும். சிறுகுறு பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது, நிதிநிலையில் ஸ்திரத்தன்மை அடைவது ஆகியவற்றுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. இத்துடன் பலதரப்பட்ட கூட்டாளிகளிடம் இருந்து இலங்கைக்கு நிதியுதவி தேவைப்படுகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தை கண்காணிக்க லடாக் எல்லையில் சீனா புதிய யுத்தி; புதிய படங்கள் வெளியாகி அதிர்ச்சி!!

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கடன் பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இலங்கை முயற்சித்து வருகிறது. இதையடுத்து, சட்ட மற்றும் கடன் ஆலோசகர்களை இலங்கை அரசு நியமித்தது. இவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும். ''வரிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதன் மூலம் நிதி வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவை மீட்கும் வகையில் கட்டணங்கள் நிர்ணயம் செய்தல், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவ சமூக செலவினங்களை உயர்த்துதல், சாதகமான வட்டி மாற்று விகிதங்களை அறிவித்தல்,  மூலதனமயமாக்கப்பட்ட வங்கி அமைப்பு மற்றும் வலுவான ஊழல் எதிர்ப்பு சட்ட கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இலங்கை அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என்று சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இலங்கை 2. 20 கோடி அளவிற்கான மக்கள் தொகையை கொண்டுள்ளது. கடனில் மூழ்கிய இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.  தற்போது தாய்லாந்தில் தனது மனைவியுடன் தங்கியுள்ளார். அங்கிருந்து அமெரிக்கா செல்வதற்கு முயற்சித்து வருகிறார் என்றும் இலங்கை வருவதற்கு முயற்சித்து வருகிறார் என்றும் இருவேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவரை அடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இவர்தான் தற்போது நிதியமைச்சராகவும் இருக்கிறார். நாட்டின் கடன் சுமையை சரி செய்ய மேலும் 29 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. ஜப்பான் மற்றும் சீனா கடன் உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக இந்தியாவும் 3.8 பில்லியன் டாலர் அளவிற்கு உதவி வழங்கியுள்ளது. 

Dawood Ibrahim age: ‘நிழல்உலக தாதா’ தாவுத் இப்ராஹிம் பற்றி தகவல் அளித்தால் ரூ.25 லட்சம் பரிசு: என்ஐஏ அறிவிப்பு

இலங்கைக்கு வெளிநாட்டு கடனாக தற்போது 51 பில்லியன் டாலர் இருக்கிறது. இதில், 28 பில்லியன் டாலரை வரும் 2027 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் பணவீக்கம் 64.3 சதவீதமாக இருந்தது. இதனால், பொருட்களின் விலை விண்ணை முட்டும் வகையில் இருந்தது. உலகிலேயே அதிகபட்ச உணவுப் பொருட்கள்  பணவீக்கத்தில்,  ஐந்தாவது இடத்தில் இலங்கை இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜிம்பாப்வே, வெனிசூலா, துருக்கி, லெபனான் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. இதையடுத்து இலங்கை இருக்கிறது.   

click me!