தொற்று நோய்கள் படையெடுப்பை இனி தடுக்க முடியாது..?? சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 6, 2020, 11:11 AM IST
Highlights

காடுகளில் மனிதர்கள் அத்துமீறல்கள் விளைவாகவே 1980களில் இருந்ததைவிட இப்போது தொற்றுநோய்களின் படையெடுப்பின் ஆண்டு விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
 

1347 இல் ஐரோப்பாவிற்கு பரவிய கறுப்பு மரணம் , 1610 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரியம்மை மற்றும் 1918 இன் ஸ்பானிஷ் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும்  இடையே நீண்டகால உறவு உள்ளது. சுற்றுச்சூழலுடன் சமநிலையை நிலைநிறுத்துவதில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், அதன் விளைவு தொற்று நோயாகவே இருக்கும் என்பதுதான் காலம் நமக்கு சொல்லும் பாடமாக உள்ளது. அதிலும் கடந்த 20 ஆண்டுகளில், உலகம் பல வகையான வைரஸால் தோற்றுவிக்கப்பட்ட தொற்றுநோய்களை எதிர்கொண்டுள்ளது, ஆனால் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இதுவரை ஒவ்வொரு நான்கு தொற்றுநோய்களில் மூன்று விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்துள்ளன. 

கண்மூடித்தனமாக காடுகளை அழிப்பது, இயற்கை வளங்களை அதிகமாக சுரண்டுவது மற்றும் விலங்குகளுக்கு அசாதாரணமான உணவுகளை கொடுத்து பழக்குவது போன்றவை பல்லுயிர் பெருக்கத்திற்கு தடையாக அமைவதுடன், பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பல்லுயிர் பெருக்கத்தை சிதைத்ததன்  காரணமாகவே உலகம்  கொரோனா போன்ற வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதிலிருந்து நாம் மீள,  நாம் சிதைத்த பல்லுயிர் பெருக்கத்தை விரைந்து மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக விவசாயத்திற்காகவும், தொழிற்சாலைகளுக்காகவும் காடுகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது, இதனால் தொற்று நோய்களின் விகிதமாகும் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 

கடந்த 2002ல் சார்ஸ், 2009ல் பன்றிக்காய்ச்சல், 2013இல் எபோலா,  2019-கொரோனா என அடுத்தடுத்து வைரஸ் படையெடுப்பு ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி எடுத்துள்ளது. இந்த  வைரஸ் தொற்று நோய்கள் அனைத்தும் விலங்குகளிடமிருந்து மனிதர்களை தாக்கியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் மனிதர்கள் அதிக அளவில் கொடூரமான, அருவருப்பான அரியவகை காட்டு விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தியிருப்பதுதான் என  சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் உலகில் இந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்துவதற்கு காரணம் காட்டு விலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்கள்  ஆக்கிரமித்ததுதான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காடுகளில் மனிதர்கள் அத்துமீறல்கள் விளைவாகவே 1980களில் இருந்ததைவிட இப்போது தொற்றுநோய்களின் படையெடுப்பின் ஆண்டு விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

உதாரணமாக கொலம்பியா போன்ற நாடுகளிலும் இந்தவகை அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன, பூமியின் மொத்த பல்லுயிர் பெருக்கத்தில் 10% கொலம்பியாவில் மட்டுமே உள்ளன, இது உலகின் முக்கிய மெகா டைவர்ஸ் நாடு என்று அழைக்கப்படுகிறது, இங்கு பல்வேறு வகையான பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் பெருமளவில் அழிந்துவிட்டன, அதேபோல் தாவரங்கள் பட்டாம்பூச்சிகள் போன்றவை அழிவின் இறுதிகட்டத்தில் உள்ளன, இங்குள்ள பல்வேறு வகையான மீன் இனங்களும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஒரு இனமே முற்றும் முதலாக துடைத்தெறியப்படும்போது அங்கு விரும்பத்தகாத வைரஸ் கிருமிகள் தலைதூக்குகிறது என சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர், எனவே  காடுகள் அழிப்பு மற்றும் வன ஆக்கிரமிப்பை தடுக்காவிட்டால் இன்னும் பலநூறு கொடிய வகை தொற்று நோய்கள் படையெடுக்கும், அதை யாராலும் தடுக்க முடியாது  என்பதே சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. 

 

click me!