பாக். ஆட்சி அமைப்பது யார்? பெரும்பான்மை இல்லாமலே வெற்றியை அறிவித்த நவாஸ் ஷெரீப்!

By SG Balan  |  First Published Feb 10, 2024, 8:46 AM IST

வெள்ளிக்கிழமை லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரீப், "பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தேர்தலுக்குப் பிறகு இன்று நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இந்த நாட்டை இக்கட்டான சுழலில் இருந்து வெளியே கொண்டுவருவது நமது கடமை" என்று கூறினார்.


பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில் வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். தனது கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும், தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாகவும் கூறினார்.

பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால் அவரது கட்சியினர் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

Tap to resize

Latest Videos

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்), முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவையும் முக்கிய கட்சிகளாக களம் கண்டன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 265 இடங்களில் முக்கால்வாசிக்கும் அதிகமான இடங்கள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்சி அமைக்க 133 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

இம்ரான் கான் மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரீப், "பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தேர்தலுக்குப் பிறகு இன்று நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இந்த நாட்டை இக்கட்டான சுழலில் இருந்து வெளியே கொண்டுவருவது நமது கடமை" என்று கூறினார்.

மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் (74), கடந்த ஆண்டு இறுதியில் நான்கு ஆண்டுகள் லண்டன் சென்று வசித்துவிட்டு, தேர்தலை முன்னிட்டு நாடு திரும்பினார். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷெரீப் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்தே தேர்தலில் போட்டியிட்டார்.

மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக வலுவான கூட்டணி அமைப்பது குறித்து பேசிவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தேர்தல் முறையில் சுயேட்சை உறுப்பினர்கள் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியாது. எனவே, சுயேச்சை உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியிலும் சேர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.50,000 கம்மியாக கிடைக்கும் ஹூண்டாய் கார்! இந்த ஆஃபர் இன்னும் கொஞ்ச நாள் தான்... ஓடுங்க...

click me!