உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்க கூடுதலாக 4 விமானங்கள் 3 நாட்கள் இயக்கப்படும் என்று உக்ரைனில் உள்ள இந்தியத்தூதரகம் அறிவித்துள்ளது
உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்க கூடுதலாக 4 விமானங்கள் 3 நாட்கள் இயக்கப்படும் என்று உக்ரைனில் உள்ள இந்தியத்தூதரகம் அறிவித்துள்ளது
முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் படைப்பிரிவான நேட்டோவில் சேரவிருப்பம்கொண்டுள்ளது. ஆனால், உக்ரைன் நேட்டோவில் சேர ரஷ்யா அனுமதிக்கவில்லை. இதனால் உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரர்களைத் திரட்டி ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டுவருவதால், உலகளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர உக்ரைன் நாட்டுக்குள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் பிரிவினருக்கும் ரஷ்யா ஆதரவு தெரிவித்து கொம்புசீவிவிட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர 3 சிறப்பு விமானங்களை இயக்குவதாக டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதன்படி, ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் 1947 ரகவிமானம் இன்று உக்ரைன் சென்றுள்ளது, இந்த விமானத்தில் 200 பேர் வரை பயணிக்க முடியும். இன்று இரவு உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் தாயகம் அழைத்துவருகிறது. அடுத்ததாக 24 மற்றும் 26ம் தேதிகளில் ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும்.
இந்நிலையில் உக்ரைனின் கிவ் நகரிலிருந்து டெல்லிக்கு கூடுதலாக 4 விமானங்களை இயக்கி, இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கிவ் நகரில் உள்ள இந்தியத்தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “ உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற கூடுதலாக 4 விமானங்களை 3 தேதிகளில் கிவ் நகரிலிருந்து டெல்லிக்கு மத்திய அரசு இயக்க இருக்கிறது. இதன்படி, இம்மாதம் 25 மற்றும் 27ம் தேதிகளிலும், மார்ச் மாதம் 6ம் தேதியும் விமானங்கள் டெல்லிக்கு இயக்கப்படுகின்றன. இதில் 27ம் தேதி மட்டும் இரு விமானங்கள் கிவ் நகரிலிருந்து இயக்கப்பட உள்ளன. சத்குரு டூர்ஸ் அன்ட் ஏர் டிராவல்ஸ், கிவ் நகரலம் என்ற முகவரியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்தியாவுக்கு ஏற்கெனவே ஏர்அரேபியா, ப்ளை துபாய்,கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையை வழங்கி வருகின்றன. இந்த விமானங்களில் பயணிக்க விரும்பும் இந்தியர்கள் அந்தந்த விமான அலுவலங்களைத் தொடர்புகொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளது