கோரோசன்-ஐஎஸ் பாகிஸ்தானின், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் இருந்து வெளியேறியவர்களும், ஆப்கனில் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கும் சேர்ந்து உருவாக்கிய தீவிரவாத அமைப்பு என தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் துண்டு துண்டாக உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் 3வது தாக்குதல் இதுவாகும்.
அமெரிக்க நோட்டோ படை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, அந்நாட்டில் ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள் இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியல் கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் முழுமையாக அகற்றப்படுவார்கள் என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆப்கன் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால், ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் ஆப்கனில் அதிகரித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த அக்- 8 ஆம் தேதி தெற்கு ஆப்கனின் குண்டுஸ் பகுதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியில் தற்கொலை ப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 47 பேர் உயிரிழந்தனர் 70க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
அதேபோல் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வடக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள சயீத் அபாத் என்ற ஷியா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குறைந்தது 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்-கே பொறுப்பேற்றது. இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வாராந்திர இதழான அல் நபாவியில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது, அதை பிரபல நியூஸ் ஏஜென்சி காமா பிரஸ் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது, அதில் உலகின் எந்தப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும், அவர்கள் எங்கள் குறியில் இருந்து தப்ப முடியாது, எங்களால் அல்லது எங்கள் கிளை அமைப்புகளால் அவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவர், குறிப்பாக ஆப்கனில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவர், பாக்தாத் முதல் கோரோசான் வரை இந்த தாக்குதல் தொடரும் என ஐஎஸ்ஐஎஸ் எச்சரித்துள்ளது. இது உலக அளவில் ஷியா முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் ராணுவ தலைமையகம் அருகே நேற்று மாலை அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது, இந்த குண்டு வெடிப்பில் 25பேர் பேர் உடல் சிதறி பலியாகினர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஏஎஸ் கோராசன் அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.ஆப்கனின் தெற்கு பகுதியில் ஒரு சில மாகாணங்களில் கோராசன்-ஐஎஸ்ஐஎஸ் முக்கிய தீவிரவாத அமைப்பாக உள்ளது.
கோரோசன்-ஐஎஸ் பாகிஸ்தானின், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் இருந்து வெளியேறியவர்களும், ஆப்கனில் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கும் சேர்ந்து உருவாக்கிய தீவிரவாத அமைப்பு என தெரியவந்துள்ளது. அதேபோல் ஆப்கன் ராணுவத்தில் இருந்த முன்னாள் உளவுத்துறை சேர்ந்தவர்களும், அந்த அமைப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தலிபான்கள் முற்றிலும் மருத்துள்ளனர். ஆப்கனில் ஒரு சில மாகாணங்களில் ஒரு சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் அந்த அமைப்பு வைத்திருந்ததாகவும், பின்னர் நோட்டோ படை தாக்குதல் மற்றும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்த பின்னர், அவர்கள் அந்தப் பகுதிகளை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஆப்கனில் இது போன்ற தாக்குதலை ஆரங்கேற்றி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.