
அயர்லாந்தின் வாட்டர்போர்டு நகரில், 6 வயது இந்தியச் சிறுமி மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அனுப அச்சுதன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக அயர்லாந்தில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாட்டர்போர்டு நகரில் வசித்து வருகிறார்.
விளையாடிக்கொண்டிருந்த சிறுமி
சம்பவத்தன்று, அனுபாவின் 6 வயது மகள் நியா, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, 12 முதல் 14 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. சிறுமியின் முகத்திலும் உடலின் பல பகுதிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதலுக்குப் பிறகு, அந்தக் கும்பல் "இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கத்திக்கொண்டே அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாய் அனுப உடனடியாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயர்லாந்தில் அதிகரிக்கும் இனவெறி
அயர்லாந்தில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக இந்திய சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இதுபோன்ற மூன்று தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவம், அயர்லாந்தில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பைக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.