
Donald Trump Imposes Additional 25% Tax On India: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது 25% வரியை ஏற்கெனவே விதித்து இருந்தார். அமெரிக்காவுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் உக்ரைன்-ரஷ்யா போருக்குப் பிறகும்கூட, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இராணுவ தளவாடங்களை அதிக அளவில் வாங்குவதாகவும், இது ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு நிதியுதவி செய்வதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்திய பொருட்களுக்கு கூடுதல் 25% வரி விதிப்பு
இதனால் இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பேன் என்று டிரம்ப் சொல்லியிருந்தார். இந்நிலையில், தான் சொன்னபடி இந்திய பொருட்கள் மீது மேலும் 25% வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். ஏற்கெனவே 25% வரி விதித்து இருந்த நிலையில், இப்போது கூடுதல் வரியுடன் சேர்த்து இந்தியாவுக்கு டிரம்ப் விதித்த வரி விதிப்பு மொத்தம் 50% ஆக உள்ளது.
பிரதமர் மோடி அதிர்ச்சி
டொனால்ட் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு இந்தியாவுடனான வர்த்தக உறவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தன்னுடைய நெருங்கிய நண்பர் டிரம்ப்பின் செயலால் பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ராகுல் காந்தி கண்டனம்
டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கையின் தோல்வியே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, ''டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு ஒரு பொருளாதார மிரட்டல்; நேர்மையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியாவை பணியவைக்கும் முயற்சியாகும். பிரதமர் மோடி தனது பலவீனத்தை இந்திய மக்களின் நலன்களை விட பெரிதாக விடக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.