கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கொல்லப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் என்ற இந்திய கேங்ஸ்டர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா - கனடா இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்றன. நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துகளே இதற்கு காரணம். மேலும் இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரி வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது. மேலும் கனடா நாட்டினருக்கு விசா வழங்கும் பணியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங்கின் உதவியாளர் சுக்தூல் சிங், கனடாவின் வின்னிபெக் நகரில் இன்று கொல்லப்பட்டார். இரு கும்பல்களுக்கு இடையேயான சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாபின் மோகாவைச் சேர்ந்த சுக்தூல் சிங் கனடாவுக்கு தப்பி சென்றவர் ஆவார்.
இந்த நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதி சுக்தூல் சிங் கொல்லப்பட்டதற்கு இந்தியாவை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கேங்கஸ்டர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த அமைப்பு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சுகா டுனுகே என அழைக்கப்படும் சுக்தூல் சிங், குர்லால் பிரார் மற்றும் விக்கி மிட்கேரா ஆகியோரின் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்துள்ளது. சுக்தூல் சிங்கை "போதைக்கு அடிமை" என்று அழைத்த லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் அவர் பலரின் வாழ்க்கையை அழித்ததாகவும், இறுதியில் அவர் "அவரது பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டார்" என்றும் தெரிவித்துள்ளது
தீவிரமடையும் இந்தியா - கனடா மோதல்: கனேடியர்களுக்கு விசா சேவை நிறுத்தியது இந்தியா
யார் இந்த சுக்தூல் சிங்?
சுக்தூல் சிங், பஞ்சாபின் மோகா பகுதியை சேர்ந்தவர், முன்னதாக தனது மாநிலத்தில் இருந்து கனடாவுக்கு தப்பிச் சென்றார். இவர் காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் என்கிற அர்ஷ் தலாவின் உதவியாளர். 2017 ஆம் ஆண்டில், சுக்தூல் சிங், அவர் மீது ஏழு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கனடாவுக்குத் தப்பிச் செல்ல போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று கனடாவுக்கு தப்பி சென்றார்.
பிரிட்டிஷ் கலிபோர்னியாவின் சர்ரேயில் மற்றொரு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில் சுக்தூல் சிங் கொல்லப்பட்ட விவகாரம் நடந்துள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் மாதம் குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.