பழிவாங்கும் நடவடிக்கையாக பைக்கர் குழு ஒன்று சேர்ந்து 64 வயதான முதியரை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சாலை போக்குவரித்தின் போது சிறு விபத்துக்கள் ஏற்படுவது மிகவும் சாதாரண விஷயம் தான். விபத்து ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள், உடனடியாக கோபம் கொள்ளாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என நிதானமாக பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறான சூழலில் விபத்தில் சிக்கியவர் மற்றும் விபத்தை ஏற்படுத்தியவர் என இருதரப்பிலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது இருதரப்புக்கும் நன்மை பயக்கும்.
எனினும், விபத்துக்களின் போது ஒருவருக்கு ஒருவர் கடுமையாக வசைபாடுவது, வாக்குவது ஏற்பட்டு, காவல் துறை புகார், அடிதடி வரை பல சம்பவங்கள் தினந்தோரும் அரங்கேறி வருகின்றன. அந்த வரிசையில் பைக்கர்கள் கேங் ஒன்று 64 வயதான நபர் மற்றும் அவரின் மகனை காரில் இருந்து வெளியே இழுத்து சாலையில் வைத்து கொடூரமாக தாக்கும் சம்பவம் அரங்கேறியது. மூன்று பைக்கர்கள், ஒருவர் ATV ரைடர் இந்த சம்பவத்தை செய்தது அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
வீடியோவின் படி பைக்கர்கள் அதிவேகமாக வந்து முதலில் காரை சுற்றி வளைத்தனர். பின் காரில் இருந்தவரை வெளியே இழுத்து, கீழே தள்ளினர். பின் நிலை தடுமாறி கீழே விழுந்த நபரை பைக்கர்கள் தாக்க ஆரம்பித்தனர். மிகக் கொடூரமாக தாக்கிய பைக்கர்கள், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை எட்டி மிதித்ததோடு, பைக்கை அந்த நபர் மீது ஏற்றினர். தாக்கியதோடு, அவரிடம் இருந்த செல்போன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஓட்டுனர் உரிமம், சுமார் 150 டாலர்கள் உள்ளிட்டவைகளை அபகரித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.
முன்னதாக காரை ஓட்டிய நபர் பைக்கர் கேங் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் பைக்கர் குழு காரை தேடி வந்து பழிக்கு பழி வாங்கும் வகையில் அதில் இருந்த ஓட்டுனர் மற்றும் அவருடன் இருந்த நபரை கொடூரமாக தாக்கி இருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளான இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது உடல்நலம் தேறி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பைக்கர் கேங் பற்றிய விசாரணையை உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் துவங்கி இருக்கின்றனர். விரைவில் பைக்கர் கேங் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்றும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.