பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவியில் இருந்த அவரது ராஜினாமா, பிரஞ்சு அரசாங்க மறுசீரமைப்பு பற்றி கடந்த சில வாரங்களாக எழுந்திருந்த ஊகங்களுக்கு மத்தியில் நடந்துள்ளது.
எலிசபெத் போர்ன், தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் இமானுவேல் மேக்ரோனிடம் சமர்ப்பித்ததாகவும், அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. ‘ஒவ்வொரு நாளும் முன்மாதிரியாக இருக்கும் பிரான்ஸ் நாட்டுக்கு எலிசபெத் போர்ன் ஆற்றிய சேவைக்காக’ அவருக்கு இமானுவேல் மேக்ரோன் நன்றி தெரிவித்துள்ளார்.
இமானுவேல் மேக்ரோனும், தானும் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வது முன்னெப்போதையும் விட மிகவும் அவசியமானது என்பதை ஒப்புக் கொண்டதாக தனது ராஜினாமா கடிதத்தில் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்ற எலிசபெத் போர்ன், பிரான்ஸின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். வெளிநாட்டினரை நாடு கடத்தும் சர்ச்சைக்குரிய குடியேற்றச் சட்டத்தின் மீதான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த சட்டத்திருத்தத்திற்கு அதிபர் இமானுவேல் மேக்ரோனின் ஆதரவும் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்பு, ஓய்வூதிய சீர்திருத்த சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தை புறக்கணித்ததாக எலிசபெத் போர்ன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் ராஜினாமா செய்துள்ளார். அந்த தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் இமானுவேல் மேக்ரோனின் கட்சி, வலதுசாரி தலைவரான மரைன் லீ பென்னை விட 8 முதல் 10 புள்ளிகள் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது: காங்கிரஸ்!
பிரெஞ்சு அரசியலமைப்பின் கீழ், அதிபர் பொதுவான கொள்கைகளை அமைத்து, அரசாங்கத்தின் அன்றாட விவகாரங்களை நிர்வகிக்க ஒரு பிரதமரை நியமிக்கிறார். அதாவது, நிர்வாகம் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் போது பிரதமர் பெரும்பாலும் பொறுப்பேற்க வேண்டும்.
எலிசபெத் போர்ன் ராஜினாமா செய்துள்ளதால், பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவிரு பெயரையும் அதிபர் அலுவலகம் அறிவிக்கவில்லை. அதேசமயம், 34 வயதான கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் மற்றும் 37 வயதான பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு ஆகியோர் பிரதமர் பதவிக்கான ரேஸில் முன்னணியில் உள்ளனர். இதில், கேப்ரியல் அட்டலுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.