இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பை இங்கிலாந்து காவல்துறை கையாண்டதை விமர்சித்து சர்ச்சைக்குள்ளான இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுயெல்லா பிராவர்மேனை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவரது சொந்த ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பிரதமர் ரிஷி சுனக் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுயெல்லா பிரேவர்மேனை பதவி நீக்கம் செய்யப்பட்டதும், அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால், காலியான வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதுபெரும் அரசியல் தலைவர் தோழர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற பின்னர், அந்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய அமைச்சரவை மாற்றம் இதுவாகும். இந்த மாற்றங்கள் குறித்து ஏறக்குறைய 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியினர் கூறுகையில், “இந்த மாற்றங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கான முடிவுகளை எடுக்க அரசாங்கத்தின் அணியை பலப்படுத்தும்.” என தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய டேவிட் கேமரூன், அதே ஆண்டில் எம்.பி. பதவியில் இருந்தும் விலகினார். 2021இல் கிரீன்சில் கேபிட்டல் நிதிக் குழும ஊழல் அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அரசாங்கத்தில் அவரது இருப்பை உறுதி செய்யும் பொருட்டு, ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் எனப்படும் பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தொடர்ந்து வருகிறார்.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ள டேவிட் கேமரூன், சர்வதேச அளவில் கடினமான சவால்களை பிரிட்டன் எதிர்கொள்ளும் நிலையில், இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.