பிரிட்டனில் ஒருவர் தற்போது ஒமைக்ரான் தொற்றால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஒருவர் தற்போது ஒமைக்ரான் தொற்றால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவியது. மேலும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். இதை அடுத்து கொரோனா பரவலை தடுக்க உலகின் அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின. இதற்கிடையே பல நாடுகளில் கொரோனா 2வது அலை பரவியது. இதை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும் அனைவரும் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. கொரோனாவின் இரண்டு அலை ஓய்ந்ததை அடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக ஒமைக்ரான் என்ற தொற்று தற்போது பரவ ஆரம்பித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. வேகமாக பரவும் தன்மையை கொண்ட இந்த ஒமைக்ரானை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்தாலும் இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. மேலும் பல நாடுகளில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிப்பு உயர்ந்து வந்தாலும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக இதுவரை செய்திகள் ஏதும் வரவில்லை. இந்த நிலையில் பிரிட்டனில் ஒருவர் தற்போது ஒமைக்ரான் தொற்றால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் 40% கொரோனா நோயாளிகள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.