
Jararacusu pit viper என்ற பாம்பின் நஞ்சு கொரோனவை கட்டுப்படுத்துவதாக பிரேசில் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நஞ்சு குரங்கின் உடலில் பரவுவதை 75% கட்டுப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 180 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. கிட்டதட்ட ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ள கொரோனா, கொத்துக் கொத்தாக மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. முதல் அலை, இரண்டாவது அலை என அடுத்தடுத்து தீவிரமாக தாக்கு நடத்தியுள்ள கொரோனா 3வது அலை, இந்த ஆண்டு இறுதியில் உருவெடுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால், ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் 90 சதவீதம் நிறைவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவும் தடுப்பூசி உற்பத்தியை பன்மடங்கு உயர்த்தியுள்ளதுடன் நாட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஆராய்ச்சியாளர்களுக்கும் இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை காட்டிலும், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் பாதிப்பு குறைவு என்பதே அதில் ஒரே ஆறுதல்.
ஆனாலும் கொரோனாவை முற்றாக ஒழித்தொழிப்பதற்கான ஆராய்ச்சியிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் ஆச்சர்யமூட்டும் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளனர். அதாவது Jararacusu pit viper பாம்பின் நஞ்சு கொரோனாவை கட்டுப்படுத்துவதாகவும், அதை குரங்கின் உடலில் பரிசோதித்தபோது அது 75% வைரசை கட்டுப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் , இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சாவே பாலோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு இந்த பாம்பின் விஷம் கொரோனா வைரஸ் இனப்பெருக்கத்தை தடுக்கிறது, பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறு கொரோனா வைரஸில் இருந்து மிக முக்கியமான புரதத்தை கட்டுப்படுத்துகிறது. அதன்மூலம் கொரோனவைரஸ் உடம்பில் பரவுவது தடுக்கப்படுகிறது . குரங்குகளில் பரிசோதித்து பார்த்ததில் 75 சதவீதம் அளவிற்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதை விரைவில் மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கலாம் என முடிவு செய்திருப்பதாகவும் பல்கலைக்கழக பேராசிரியரும் ஆய்வின் ஆசிரியருமான ரபேல் கைடோ கூறினார். மேலும் இந்த தகவல் அறிவியல் ஆராய்ச்சி இதழான molecules இதழில் வெளியாகி உள்ளது.
மேலும், பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறு ஒரு பெப்டைட் அல்லது அமினோ அமிலங்களின் சங்கிலி ஆகும், இது PLPro எனப்படும் கொரோனா வைரஸின் நொதியுடன் இணைக்க முடியும், இது மற்ற உயிரணுக்களை காயப்படுத்தாமல், வைரஸின் இனப்பெருக்கத்தை தடுக்கிறது. பாக்டீரியா எதிர்ப்பு குணங்களுக்கு ஏற்கெனவே அறியப்பட்ட பெப்டைடை ஆய்வகத்திலேயே தயாரிக்க முடியும் என தெரிவித்த பேரிசிரியர் கைடோ ஒரு நேர்காணலில், இதற்காக பாம்புகளைப் பிடிப்பது அல்லது வளர்ப்பது போன்ற விபரீதங்களில் யாரும் ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்று எச்சரித்துள்ளார்."உலகைக் காப்பாற்றப் போகிறோம் என்று நினைத்துகொண்டு பிரேசிலைச் சுற்றியுள்ள ஜரரக்குசு பாம்பை வேட்டையாட மக்கள் முனைய வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.