லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பால் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். லெப்டினன்ட் ஜெனரல் சாஹிர் ஷம்ஷத் மிர்சா, பணியாளர் கமிட்டியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் துறை அமைச்சர் மர்யம் அவுரங்கசீப் டுவீட் செய்துள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிக்கையை ஒப்புதலுக்காக அதிபருக்கு அனுப்பப்பட இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை ராணுவ தளபதியாக இருக்கும் கமர் ஜாவெத் பாஜ்வா ஓயவு பெறுவதை அடுத்து அவரது இடத்திற்கு அசிம் முனீர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே பணி நீட்டிப்பு பாஜ்வாவுக்கு வழங்கப்பட்டு இருந்தது. நவம்பர் 29ஆம் தேதியுடன், 61 வயதாகும் பாஜ்வா ஓய்வு பெறுகிறார். இனி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறுகையில், ''இந்த நியமனம் அதிபர் ஆரிப் அல்விக்கு அனுப்பப்படும். அவர் இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறோம். இதற்கு மாறாக வேறு யாரையும் அவர் தேர்வு செய்யமாட்டார் என்று நம்புகிறோம். சட்டங்களுக்கு உட்பட்டே இந்த நியமனத்தை செய்து இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 30 பிரதமர்கள் பதவி வகித்து வந்துள்ளனர். அதேசமயம், 17வது ராணுவ தலைமை தளபதியாக அசிம் முனீர் பதவியேற்க இருக்கிறார்.
அசிம் முனிர் பின்னணி:
மாங்களாவில் இருக்கும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் ஸ்கூலில் பட்டப் படிப்பை முடித்து இருக்கும் அசிம் முனீர். ராணுவத்தில் காலாட் படைப் பிரிவில் சேர்ந்தார். சில நாட்கள் வடக்குப் பிரிவில் ராணுவ தளபதி பாஜ்வா கீழ் பணியாற்றி வந்தார். இதன் பின்னர், நாட்டின் முக்கிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக பணிபுரிந்து வந்தார். எட்டு மாதங்களே இவரால் இந்தப் பதவியில் நீடிக்க முடிந்தது. பாகிஸ்தான் வரலாற்றில் குறைந்த நாட்கள் இந்தப் பதவியில் இருந்தவர் என்ற பெயரும் அசிம் முனீருக்கு கிடைத்தது. இந்த நிலையில், இவரை அந்தப் பொறுப்பில் இருந்து அப்போதைய பிரதமர் இம்ரான்கான் நீக்கினார். முனிருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனெரல் ஃபயஸ் ஹமித் ஐஎஸ்ஐ தலைவரானார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான், லெப்டினன்ட் ஜெனரல் முனீர் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இதற்குக் காரணம், முனீர் மனைவி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் கவனத்திற்குக் கொண்டு வந்த எட்டு மாதங்களுக்குள் அவரை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்திய விவகாரம்:
லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் இந்திய விவகாரங்களை நன்கு அறிந்தவர் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 2019 ஆம் ஆண்டில், புல்வாமா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உச்சத்தை எட்டியபோது முனீர் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவராக இருந்தார். அப்போது, பாகிஸ்தான் ராணுவ முடிவுகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் முனீர் இருந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ
பாகிஸ்தானில் ராணுவத்துக்கு அதிக அதிகாரம் உள்ளது. நினைத்தால், ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களை தூக்கி எறிய முடியும். பிரிட்டனிடம் சுதந்திரம் பெற்றதில் இருந்து அதன் 71 ஆண்டுகால வரலாற்றில் ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ராணுவம்தான் ஆட்சி செய்துள்ளது. மேலும், மக்கள் தொடர்பான அதிகார வரம்புகளில் கூட அதிகாரங்களை அனுபவித்து வருகிறது.
ஐஎஸ்ஐ மீது குற்றச்சாட்டு:
ஐஎஸ்ஐயின் தலைவராக இருந்தவர் தற்போது பாகிஸ்தானின் மிக முக்கிய பதவியில் அமர இருக்கிறார். இந்தியா உள்பட அண்டை நாடுகளை குறிவைத்து இஸ்லாமிய போராளிகளை ஏவியது, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மற்றும் பிற போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகள் ஐஎஸ்ஐ மீது ஏற்கனவே உள்ளது.
டெல்லி மற்றும் தலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான் உடனான இருதரப்பு உறவுகளில் பாகிஸ்தான் புதிய ராணுவத் தலைவர் அசிம் முனீர் தனது செல்வாக்கை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான காஷ்மீர் பிரச்சனையை கிளப்புவார் என்று கருதப்படுகிறது.
ஓய்வு பெற இருக்கும் ராணுவ தளபதியான ஜெனரல் பஜ்வா, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2021 ஆம் ஆண்டில் மேற்கொண்டு இருந்தார். புதிய சிக்கலை இந்தியா எல்லையில் எதிர்கொள்ளுமா என்பது புதிய ராணுவ தளபதியின் அணுகுமுறைதான் தீர்மானிக்கும். அரசாங்கம் சீனாவின் பக்கம் சாயுமா அல்லது அமெரிக்கா பக்கம் சாயுமா என்பதற்கும் விரைவில் பதில் கிடைத்துவிடும்.