
Trump Administration: Elon Musk's resignation - what is the main reason?: அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விலகுவதாக (Department of Government Efficiency - DOGE) தொழில் அதிபரும், டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய நண்பருமான எலான் மஸ்க் திடீரென அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபிறகு செயல் திறன் துறை புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்கு எலான் மஸ்க் தலைவராக நியமிக்கப்பட்டார்.
DOGE துறையில் இருந்து எலான் மஸ்க் விலகல்
இந்நிலையில் தான் எலான் மஸ்க் அதில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவுக்கு வருவதால், வீணான செலவினங்களைக் குறைப்பதற்கான ஒரு பணியை வழங்கி எனக்கு வாய்ப்பளித்த டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட DOGE துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்'' என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வெற்றி பெற காரணமான எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். டிரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த எலான் மஸ்க் நிதியை வாரி வழங்கினார். இதனால் தான் தேர்தலில் வெற்றி பெற பிறகு அமெரிக்காவில் தேவையில்லாத செலவினங்களை குறைப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட DOGE துறைக்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமித்தார் டிரம்ப்.
புதிய வரி மசோதாவை எதிர்த்த எலான் மஸ்க்
டொனால்ட் டிரம்ப் அதிபரானது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா பொருட்கள் மீது வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு மேற்கொண்டுள்ளார். அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவை எலான் மஸ்க் விரும்பவில்லை. இந்த வரி விதிப்பால் தான் ஏமாற்றம் அடைந்ததாக அவர் கூறியிருந்தார். மேலும் பல்வேறு விஷயங்களில் டிரம்புக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், DOGE துறையில் இருந்து எலான் மஸ்க் விலகியுள்ளார்.
DOGE விமர்சனங்களுக்கு பலிகடாவானது
முன்னதாக, மே 27 அன்று வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த பேட்டியில், DOGE விமர்சனங்களுக்கு பலிகடாவாக மாறிவிட்டதாக எலான் மஸ்க் விரக்தியை வெளிப்படுத்தினார். “DOGE எல்லாவற்றிற்கும் சாட்டையடியாக மாறி வருகிறது. எங்கும் ஏதாவது தவறு நடந்தாலும், அதில் நமக்கு எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட நாம் குற்றம் சாட்டப்படுகிறோம்” என்று அவர் கூறினார்.
டொனால்ட் டிரம்ப் கருத்து என்ன?
எலான் மஸ்க் DOGE துறையில் இருந்து வெளியேறபோவது குறித்து டொனால்ட் டிரம்பின் முன்பே கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''DOGE உடன் பணிபுரியும் பலர் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், அவர்கள் நிறைய கற்றுக்கொண்டார்கள். அவர்கள் DOGE நபர்களைக் கையாளுகிறார்கள். அவர்களில் சிலர் DOGE நபர்களைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அது முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.