Qatar : உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் கடந்த மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்தது. தற்போது அது குறித்த முடிவை எடுத்துள்ளது கத்தார் அரசு.
8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த இந்தியாவின் மனுவை ஏற்றுள்ளது கத்தார் நீதிமன்றம். இந்தியா அளித்துள்ள மேல்முறையீட்டை ஆராய்ந்த பின்னர், கத்தார் நீதிமன்றம் விசாரணை தேதியை நிர்ணயிக்கும் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவர்களை காக்க புதிய வழி பிறந்துள்ளது என்றே கூறலாம்.
வெளியான அறிக்கைகளின்படி, அந்த எட்டு பேரும் கடந்த ஆகஸ்ட் 2022ல் உளவு பார்த்ததற்காக கத்தாரின் உளவுத்துறை நிறுவனத்தால் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்பது குறித்து கத்தார் நாட்டு அதிகாரிகள் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை. இவர்களது ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான தீர்ப்பை கத்தாரில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது.
இதயத்தை உருக்கும் காணொளி! எப்போதுமே தனிமை.. பாசத்துக்காக ஏங்கும் 4 வயது கொரிய சிறுவன்..!
இருப்பினும் அந்த 8 பேருக்கு தங்களது தூதரகத்தை அணுக அனுமதி வழங்கப்பட்டது, இந்திய அதிகாரிகள் அவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கின் உணர்ச்சிகரமான தன்மை காரணமாக "ஊகங்களில் ஈடுபடுவதை" தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் அனைவரையும் வலியுறுத்தியுள்ளது.
தற்போது கத்தார் நாட்டில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை வீரர்கள் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்த் மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் ஆவர்.
இந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் அனைவரும் இந்திய கடற்படையில் சுமார் 20 ஆண்டுகள் வரை சிறப்பான சேவை சாதனை படைத்தவர்கள். மற்றும் படையில் பயிற்றுனர்கள் உட்பட முக்கிய பதவிகளை வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிகாரிகளில் ஒருவரின் சகோதரியான மீது பார்கவா, தனது சகோதரரை அழைத்து வர அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளார். ஜூன் 8 அன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு பதிவில், இந்த விவகாரத்தில் தலையிட பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இஸ்ரேலை சேர்ந்த 13 பேர், தாய்லாந்தை சேர்ந்த 12 பிணைக்கைதிகளும் விடுதலை..!
"இந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் தேசத்தின் பெருமை, அவர்கள் அனைவரையும் இனி தாமதிக்காமல் உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய நேரம் இது என்று எங்கள் மாண்புமிகு பிரதமரை மீண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவரது பதிவில் இருந்தது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.