எகிப்தில் ரஷ்ய நபர் ஒருவரை சுறா மீன் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
எகிப்த் நாட்டில் உள்ள செங்கடலில் சுறா மீன்கள் தாக்குதல் அதிகளவில் நடந்து வருகிறது. கடலில் குளிக்க செல்லும் நபர்கள் சுறாக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலில் ஜாலியாக நீந்திக் கொண்டிருக்கும் சுறா மீன்க்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதனால், அவ்வப்போது செங்கடல் கடற்கரையை அந்நாட்டு அரசு மூடி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், சுறாக்களின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்தவகையில், எகிப்தின் ஹுர்காடா நகருக்கு அருகே செங்கடலில் நீந்திக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவர் Tiger Shark எனப்படும் சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளானார். அவரை கொடூரமாக தாக்கிய அந்த சுறா மீன், இறுதியில் அவரை உயிருடன் விழுங்கியது. உயிரிழந்தவர் விளாடிமிர் போபோவ் என்ற ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனை அந்நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகம் உறுதி படுத்தியுள்ளது.
Shark attack at a beach in Egypt pic.twitter.com/EJZcOjXfxl
— Leeroy Johnson (@LeeroyPress)
சுறா தாக்குதலுக்கு உள்ளாகி ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளதாகவும், சுறா மீன் அவரை உயிருடன் விழுங்கியதாகவும் எகிப்து அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் நீந்தும் அவரை விடாமல் துரத்தி சென்று தாக்கிய சுறா, அவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
JUST IN - Egyptians have reportedly caught the shark that attacked and killed the Russian citizen pic.twitter.com/u3i0XbiL2k
— Insider Paper (@TheInsiderPaper)
இந்த நிலையில், ரஷ்ய நாட்டை சேர்ந்தவரை கொன்ற அந்த சுறாவை அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுறாவை மக்கள் பிடிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால், ரஷ்யாவை சேர்ந்தவரை கொன்ற சுறா தானா அது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.