அவரின் உடல் எடை கூடுவது அவருக்கு தெரிந்தாலும் ஊரடங்கு மற்றும் வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க தயங்கிவந்துள்ளார்
சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அது மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கி வருகிறது, அதில் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த வைரஸ் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் வரையறுக்க முடியாத அளவிற்கு உள்ளது. சளி, இருமல் தலைவலி, காய்ச்சல் என்றிருந்த நிலைமை மாறி, நுகர்வு திறன் இழப்பு, கண் எரிச்சல், கை கால் வீங்குதல், உடல் வலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக முதலில் கண்டறியப்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதாக பிறகு கூறப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் ரத்த நாளங்களில் ரத்தக் கட்டிகளை ஏற்படுத்துகிறது எனவும், இதனால் உடலில் பல பகுதிகள் செயலிழந்து பக்கவாதத்திற்கு தள்ளப்பட்டு நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் கொடூரமாக இறக்க நேரிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க வைரஸ் பிறப்பிடமான வுஹான் நகரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது, அதாவது கடந்த 5 மாதங்களாக வுஹான் நகரம் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது. வீட்டு சிறையில் அடைபட்ட அந்நகரத்தின் 26 வயது இளைஞர், சுமார் 100 கிலோ எடை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பக்க விளைவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் போராடி வரும் நிலையில், வுஹான் கடந்த 5 மாதங்களாக பூட்டப்பட்டதன் விளைவாக இளைஞர் ஒருவரின் எடை பன்மடங்கு அதிகரிக்கபட்டிருப்பது அந்நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வுஹான் நகரை சேர்ந்த 26 வயது இளைஞர் ஷோ நகரின் ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 மாதங்கள் அவர் வீட்டில் இருக்க வேண்டிய நிலைக்கு ஆளானார், இந்நிலையில் அவரது உடல் எடை மளமளவென அதிகரித்தது.
ஷோவின் உடல் எடை டிசம்பர் மாதத்தில் 177 கிலோவாக இருந்தது, ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் எதிரொலியாக நகரம் பூட்டப்பட்டதையடுத்து அடுத்த 5 மாதத்தில் அவரது எடை 100 கிலோ அதிகரித்தது. அவரின் உடல் எடை கூடுவது அவருக்கு தெரிந்தாலும் ஊரடங்கு மற்றும் வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க தயங்கிவந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவர் உடல் எடை அதிகரித்ததால், வுஹான் நகரத்திலேயே அதிக எடை கொண்ட நபராக அவர் மாறியுள்ளார். அவரின் உடல் எடை 277 கிலோவாக உள்ளதால் அவரால் சரியாக நிற்கவோ நடக்கவோ முடியவில்லை, நோய் தொற்று காரணமாக அவர் சிகிச்சை பெறாத காரணத்தால், அவர் தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.