போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஒரே வாரத்தில் தூக்குத்தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியுள்ளது
சிங்கப்பூரில் ஹெராயின் கடத்திய குற்றத்திற்காக 39 வயது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 5 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்தில் மட்டும் 3 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடத்தலுக்காக சுமார் 55 கிராம் ஹெராயின் வைத்திருந்த குற்றத்திற்காக முகமது ஷலீஹ் அதுல் லத்தீஃப் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
“2016ஆம் ஆண்டில் கைது செய்யப்படுவதற்கு முன்பு முகமது லத்தீஃப் டெலிவரி டிரைவராகப் பணிபுரிந்தார். விசாரணையின் போது, கடனை திருப்பி செலுத்த வேண்டிய நண்பருக்கு பணத்திற்கு பதிலாக கடத்தல் சிகரெட்டுகளை விநியோகிப்பதாக நினைத்தேன்.” என அவர் தெரிவித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
38 விமானங்கள், 300 கார்கள், 52 படகுகள்.. இந்த உலகப் பணக்காரரின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சிங்கப்பூர் அரசு கொரோனாவின் போது இரண்டு ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த மரணதண்டனையை 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு துவங்கியது. அப்போதிலிருந்து தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்ட கைதிகளில் முகமது லத்தீஃப் 16ஆவது நபர் ஆவார்.
போதைப்பொருள் கடத்தியதற்காக சுமார் 20 ஆண்டுகளில் முதன்முதலாக 45 வயதான பெண் ஒருவருக்கு சிங்கப்பூர் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியது. மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தையும் மீறி அப்பெண் கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டார். அந்த தண்டனை முடிந்து ஒரு வாரத்திற்குள்ளாக முகமது லத்தீஃப் தூக்கிலிடப்பட்டுள்ளார். அப்பெண் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சுமார் 50 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக அஜீஸ் பின் ஹுசைன் என்ற 57 வயது நபருக்கு மரண தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியது.
ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் மரண தண்டனைகளை கண்டித்ததுடன், மரண தண்டனைக்கு சிங்கப்பூர் அரசு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டது. இந்த விவகாரத்தில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வந்தாலும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மரணதண்டனை ஒரு பயனுள்ள விஷயமாகவே சிங்கப்பூர் அரசு பார்க்கிறது.