முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்யா போர்! விரைவில் புதின்-ஜெலென்ஸ்கி சந்திப்பு! டிரம்ப் கன்பார்ம்!

Published : Aug 19, 2025, 08:45 AM IST
Trump

சுருக்கம்

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விரைவில் புதின்-ஜெலென்ஸ்கி சந்திப்பு நடைபெறும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Ukraine-Russia War! Putin-Zelensky Meeting Soon: உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு படியாக அவர் சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்தனர்.

ஜெலென்ஸ்கி-டிரம்ப் சந்திப்பு

ஆனால் முக்கிய அறிவிப்புகள் எதுவுமின்றி இந்த சந்திப்பு முடிவடைந்தது. அதேசமயம், உக்ரைனுக்கு எதிர்காலத்தில் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதில் பங்கேற்கும். சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தீர்ப்பதற்காக ஜெலென்ஸ்கி‍ புதின் நேரடி சந்திப்பை ஏற்பாடு செய்வதாக டிரம்ப் தெரிவித்தார். இடம் பின்னர் முடிவு செய்யப்படும். அதன் பிறகு, அமெரிக்கா - ரஷ்யா - உக்ரைன் முத்தரப்பு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் போர் நிறுத்தம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும்.

ஜெலென்ஸ்கி நன்றி

இதற்கிடையில், டிரம்ப் 40 நிமிடங்கள் புதினுடன் தொலைபேசியில் பேசினார். ஆனால், ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க முதலில் போர் நிறுத்தம் அவசியம் என்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெர்மனியும் பிரான்சும் வலியுறுத்தின. பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக முடிவடைந்ததாக டிரம்ப் தெரிவித்தார். சமாதான முயற்சிகளுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பு சமாதானத்திற்கான ஒரு படி என்று ஐரோப்பிய தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

விரைவில் புதின்-ஜெலென்ஸ்கி சந்திப்பு

ஜெலென்ஸ்கியும், விளாடிமிர் புதினும் விரைவில் சந்திப்பார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு எங்கு வைத்து நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெலென்ஸ்கியுடன் நடந்த சந்திப்புக்கு பிறகு சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட டிம்ப், ''உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் நான் சந்தித்தேன்.

டிரம்ப் சொன்னது என்ன?

உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். ரஷ்யா/உக்ரைனுக்கு அமைதி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக புடினுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான நேரடி சந்திப்புக்கான ஏற்பாடு நடந்து வருகிறது. விரைவில் நேரம், இடம் முடிவு செய்யப்படும்'' என்றார்.

புதினை சந்திக்க ரெடி - ஜெலென்ஸ்கி

டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஜெலென்ஸ்கி கூறுகையில், ''புதினை சந்திப்பதற்கான எந்த தேதிகளும் எங்களிடம் இல்லை. ஆனால் நாங்கள் ஒரு முத்தரப்பு சந்திப்புக்கு தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தினோம். உக்ரைன் அமைதிக்கான வழியில் ஒருபோதும் தடையாக நிற்காது. நாங்கள் தலைவர்கள் மட்டத்திலான எந்த வடிவத்தின் பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளோம்'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!