
கிரேக்கத்தின் கோர்ஃபு (Corfu) நகரிலிருந்து புறப்பட்ட ஜெர்மன் விமான நிறுவனமான கோண்டோர் ஏர்வேஸ் (Condor Airways) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் ஒரு இன்ஜினில் தீப்பிடித்தது. இதனால் இத்தாலியின் பிரிண்டிசி (Brindisi) நகரில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 270-க்கும் மேற்பட்ட பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
சனிக்கிழமை இரவு 8 மணியளவில் கோர்ஃபு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் டஸெல்டோர்ஃப் (Düsseldorf) நகருக்குச் செல்ல வேண்டிய DE3665 என்ற விமானம் புறப்பட்டது. போயிங் 757-300 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் 1,500 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் வலதுபுற இன்ஜினில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட விமானிகள் உடனடியாக அந்த இன்ஜினை அணைத்தனர்.
விமானம் கோர்ஃபு துறைமுகப் பகுதிக்கு மேல் பறந்து சென்றபோது, வெடிப்புச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதில் விமானத்தின் இன்ஜினிலிருந்து தீப்பொறிகள் வெளியேறுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
திசை திருப்பப்பட்ட விமானம்
விபத்து ஏற்பட்டவுடன் விமானம் கோர்ஃபுவுக்கே திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விமானி ஒரு இன்ஜினில் மட்டுமே பயணிக்கத் திட்டமிட்டு, விமானம் நிலைத்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்தார். பின்னர், விமானம் 8,000 அடி உயரத்துக்குப் பறந்து, இத்தாலியின் தென் பகுதி நோக்கித் திசைதிருப்பப்பட்டது.
இதையடுத்து, இத்தாலியின் பிரிண்டிசி விமான நிலையத்தில் அவசரகால உதவிக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளில் பெரும்பாலானோர் ஜெர்மன் நாட்டினர் ஆவர். அவர்கள் அனைவரும் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டு, மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாற்று விமானம் மூலம் டஸெல்டோர்ஃபுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.