
Donald Trump Angry With Israel: ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்க இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இந்த போரில் அமெரிக்காவும் களமிறங்கி ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்
மத்திய கிழக்கு பகுதியில் இரு நாடுகளும் கடுமையாக சண்டையிட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இஸ்ரேலும், ஈரானும் போரை நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் ஈரான் அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை. இதன்பிறகு போர் நிறுத்தம் செய்த பிறகும் ஈரான் தாக்குவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
இஸ்ரேல் மீது கோபம் அடைந்த டிரம்ப்
இதற்கு மறுப்பு தெரிவித்த ஈரான் இஸ்ரேல் தான் தங்களை தாக்குவதாக தெரிவித்தது. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேல் மீது அவர் கடும் கோபம் அடைந்துள்ளார். ''ஈரான் மீது குண்டுகளை வீசுவதை நிறுத்திவிட்டு, உங்கள் போர் விமானங்களை திரும்ப சொல்லுங்கள்'' என்று இஸ்ரேலிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு பார்த்ததில்லை
தான் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் கருதுவது குறித்து கடுமையான வார்த்தைகளை டிரம்ப் வெளியிட்டார். "போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தவுடன், அவர்கள் [இஸ்ரேல்] வெளியே வந்து ஏராளமான குண்டுகளை வீசினர். இதுபோன்ற குண்டுகளை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று ஹேக்கில் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு டிரம்ப் கூறினார்.
இஸ்ரேல் செய்தது என்ன?
முன்னதாக, அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக குற்றம் சாட்டி, தெஹ்ரான் நகர் மீது "தீவிரமான தாக்குதல்களுக்கு" உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார். இதனைத் தொடர்ந்தே டிரம்ப் இஸ்ரேல் மீது கடும் கோபம் கொண்டு தாக்குதல்களை நிறுத்தும்படி தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயார்
இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தேடவில்லை. ஆனால் இஸ்ரேலுடன் போர்நிறுத்தம் ஏற்பட்டதால் அதன் "சட்டபூர்வமான உரிமைகளை" தொடர்ந்து பாதுகாக்கும் என்று அவர் கூறியுள்ளார். ''ஈரான் இஸ்லாமிய குடியரசு அதன் சட்டபூர்வமான உரிமைகளை மட்டுமே நிலைநிறுத்த முயல்கிறது என்பதை நீங்கள் அவர்களுக்கு (அமெரிக்காவுக்கு) ப்விளக்குவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன் ஒரு தொலைபேசி அழைப்பின் போது பெஷேஷ்கியன் கூறியதாக அதிகாரப்பூர்வ IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.