இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் மரணத்துக்கு எங்களுக்குத் தொடர்பு இல்லை என்று தலீபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி அரசுக்கு எதிராக தலீபான்கள் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது. இதனால், ஆப்கனில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இத்தாக்குதல்களைப் படம் பிடிக்க சென்ற இந்தியாவைச் சேர்ந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளரான புகழ்பெற்ற புலிட்சர் விருது பெற்ற டனிஷ் சித்திக், தலீபான்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு ஆப்கன் அதிபர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டனிஷ் சித்திக்கின் மரணத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் உயிரிழக்க நாங்கள் காரணமில்லை என்றும் தலீபான்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலீபான்களின் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறுகையில், “இரு தரப்புக்கு நடந்த மோதலில் அவர் உயிரிழந்தது எங்களுக்குத் தெரியாது. போர்க்களத்துக்கு வரும் செய்தியாளர்கள் எங்களிடம் முன்கூட்டியே அதுபற்றி தகவலை தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் அவர்களை நாங்கள் பத்திரமாகப் பார்த்து கொள்வோம்.” என்று தெரிவித்துள்ளார். தலீபான்களின் இந்த அறிவிப்பால், சித்திக்கின் மரணத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.