உலகத்தை சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா..!! செய்வதறியாமல் கதறும் உலக நாடுகள்..!!

By Ezhilarasan Babu  |  First Published Aug 4, 2020, 1:19 PM IST

பொலிவியா நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அமைச்சர் அல்வாரோ ரோட்ரிகோ குஜ்மானுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதுவரை உலக அளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.84 கோடியை கடந்துள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இதுவரை உலக அளவில் 1 கோடியே 84 லட்சத்து  42,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு கோடியே 16 லட்சத்து 72  ஆயிரத்து 315 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரேசிலில் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

பிரேசில் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கால் அந்நாடு வைரஸ் தொற்றிலிருந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ள அதிபர் ஜைர் போல்சனரோ, அமைச்சர்களுடன் முக்கிய சந்திப்பை நடத்த உள்ளார்.  இதில் சில கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்படலாம் என நம்பப்படுகிறது. 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில்  561 பேர் உயிரிழந்துள்ளனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் மாறியுள்ளது. அமெரிக்காவை அடுத்து பிரேசில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சாவோ பாலோ நகரத்தில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் இந்த பகுதியில் சுமார் 60,000 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இஸ்ரேலில் வேகம் எடுக்கும் கொரோனா:

இஸ்ரேலில் மீண்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த 24 மணிநேரத்தில் 1,615 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 546 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். 


 

பொலிவியா நாட்டின் எரிசக்தி துறை அமைச்சருக்கு கொரோனா:
 
பொலிவியா நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அமைச்சர் அல்வாரோ ரோட்ரிகோ குஜ்மானுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரே இது குறித்த தகவலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள குஜ்மான், கடந்த 4 மாத காலமாக கொரோனாவுக்கு எதிராக களத்தில் பணியாற்றி வந்த நிலையில், தனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,  எனவே என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், அதேநேரத்தில் தொய்வின்றி அரசுப் பணிகளை மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளார். இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜ்மானுக்கு முக்கிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவே அவரது உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

போலந்தில் அதிரடிகாட்டும் கொரோனா

மற்ற நாடுகளைப் போல தற்போது போலந்து நாட்டிலும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது, போலந்து கடைவீதிகளில் மக்கள் முக கவசம் மற்றும் சமூக  இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரிகள் கடை வீதிகளுக்கு சென்று ஆய்வுகளை நடத்தி வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் லூகாஸ் சுமோவ்ஸ்க் தெரிவித்துள்ளார். அதே போல முக கவசங்களை பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலந்து அரசு பல பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 

click me!