படிப்படியாக மீளும் இத்தாலி..! 24 நாட்களுக்கு பின் குறைந்த கொரோனா பலி..!

By Manikandan S R SFirst Published Apr 13, 2020, 9:08 AM IST
Highlights

தற்போது இத்தாலியில் படிப்படியாக பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்று அங்கு கொரோனாவால் 431 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 நாட்களில் மிக குறைந்த எண்ணிக்கையாக இது கணக்கிடப்பட்டுள்ளது.

சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் அங்கு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் உலகத்தின் பிற நாடுகளில் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 210 நாடுகளுக்கு பரவி விஸ்வரூபம் எடுத்திருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 18 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேரை பாதித்து 1,14,090 உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தற்போது பெரும் நாசம் விளைவித்து வருகிறது. சீனாவிற்கு பிறகு முதலில்  இத்தாலியில் தான் கொரோனா வைரஸ் அசுர வேகம் எடுத்திருந்தது. கடந்த மார்ச் முதல் இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் 19ம் தேதி முதல் தினமும் 500க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து வந்தது. அந்த எண்ணிக்கை படிப்படியாக கூடி மார்ச் இறுதியில் 700 முதல் 800 உயிர்களை காவு வாங்கத் தொடங்கியது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். கொரோனா வைரஸிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஒட்டுமொத்த இத்தாலியும் நிலைகுலைந்து போனது.

இதையடுத்து இத்தாலியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். பாதிக்கபட்டவர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைளும் துரிதப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது இத்தாலியில் படிப்படியாக பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்று அங்கு கொரோனாவால் 431 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 நாட்களில் மிக குறைந்த எண்ணிக்கையாக இது கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 363 பேருக்கு அந்நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகி தனிமை சிகிச்சைகயில் வைக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 899 எட்டியிருக்கிறது. கொரோனா வைரஸ் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருவதால் இத்தாலி மக்கள் சற்று ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.

click me!