அமெரிக்காவின் பிரபல ஊடகங்களில் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு உலக நாடுகள் முதல் அலையில் இருந்து தப்பித்தாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதன் இரண்டாவது அலையில் சிக்கி சீரழிந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் அமைந்துள்ள இறைச்சி சந்தையில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 16 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 35 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒரு வைரஸ் எனவும், அது சீனாவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க சீனா தான் கொரோனா வைரஸை உருவாக்கியதாக தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்காவின் பிரபல ஊடகங்களில் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து வரும் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கொரோனா வைரஸ் எங்கு உருவானது என்பது தொடர்பான காரணத்தை 90 நாட்களில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க அமெரிக்க உளவுத்துறைக்கு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதற்கு சீனா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைட, அதன் தரவுகள் அனைத்தும் எவ்வித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக கையாளப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதனால் கடுப்பான சீன அரசு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான ஜாவோ லிஜியன், “ஈராக்கிற்கு கோடிக்கணக்கில் ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளது தொடர்பாக அமெரிக்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களை திசை திருப்பவே கொரோனா விவகாரத்தை அந்நாட்டு அரசு கையில் எடுத்துள்ளதாக கடுமையாக சாடியுள்ளார். மேலும் கொரோனா தொற்றின் தொடக்கம் குறித்து எங்களுக்கு அமெரிக்காவின் மீது சந்தேகம் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும் என்றும், உலகமெங்குமுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ஆய்வகங்களில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.