இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டுவரும் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவில் இருந்து தப்பிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து ஆண்டிகுவா பிரதமர் கஸ்டான் ப்ரௌனி, WION ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டனர். இந்த வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய விசாரணை முகமைகள் விசாரணை செய்துவருகிறது.
நீரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுவரும் நிலையில், மெகுல் சோக்ஸி கரீபியன் தீவான ஆண்டிகுவாவில் குடியேறி, கடந்த 2018ம் ஆண்டு அங்கு குடியுரிமையும் பெற்றார்.
தேடப்படும் குற்றவாளிகளை நாடு கடத்துதால் தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்த நாடுகளின் பட்டியலில் ஆண்டிகுவா இல்லை. ஆனாலும், மெகுல் சோக்ஸியை நாடு கடத்த இந்திய விசாரணை முகமைகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், ஆண்டிகுவாவில் இருந்து மெகுல் சோக்ஸி தப்பிவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவில் இருந்து தப்பியதாக வெளியான தகவல் மற்றும் சோக்ஸியை இந்தியாவிற்கு நாடுகடத்துவது குறித்தும் WION ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஆண்டிகுவா பிரதமர் கஸ்டான் ப்ரௌனி பேசியதாவது:
ஆம். மெகுல் சோக்ஸி தப்பியதாக தகவல் கிடைத்துள்ளது. எங்கள் நாட்டு சட்ட அமலாக்கம், அவரது வாகனத்தை கண்டுபிடித்துவிட்டார்கள்; ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மெகுல் சோக்ஸியின் ஆண்டிகுவா குடியுரிமையை ரத்து செய்வது, இந்தியாவிற்கு நாடு கடத்துவது ஆகிய 2 விஷயங்களையும் ஆண்டிகுவா நீதிமன்றம் முன்வைத்தது. ஆனால் அவை இரண்டுக்கும் எதிராக நீதிமன்றத்தில் போராடுகிறார் சோக்ஸி. பிரிட்டனின் பிரபல கிரிமினல் வழக்கறிஞரான எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டை தனது வழக்கறிஞராக நியமித்திருக்கிறார்.
ஆண்டிகுவாவில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பிவிட்டதாக கூறப்பட்டாலும், அதற்கான நம்பகமான தகவல் இல்லை. எங்கள் STRATCOM தப்பிய நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தப்பிய நபர்களின் பட்டியலை இண்டர்போலுடனும் பகிர்ந்துள்ளது. மெகுல் சோக்ஸிக்கு இந்தியா ரெட் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அவர் வேறு நாட்டிற்கு தப்பி சென்றிருந்தாலும், அவரை நாடு கடத்துவது தொடர்பாக அந்த நாட்டின் ஒத்துழைப்பு இந்தியாவிற்கு தேவை.
ஆனால் நான் மீண்டும் சொல்கிறேன்.. மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவில் இருந்து வெளியேறிவிட்டார் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. எங்கள் காவல்துறை அவரை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டிவருகிறது. தப்பியோடிய நபர்களுக்கு எங்கள் நாட்டில் க்ரீன் நோட்டீஸ் விடுக்கப்படும். அது இண்டர்போலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே மெகுல் சோக்ஸிக்கு எதிராக இந்தியா விடுத்த ரெட் நோட்டிஸுக்கு, இந்த க்ரீன் நோட்டீஸும் சர்வதேச அளவில் வலுசேர்க்கும். ஒருவேளை ஆண்டிகுவாவில் இருந்து சோக்ஸி வெளியேறியிருந்தாலும், அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவும், அவருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் அது உதவும்.
இதுவரை இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தே வருகிறோம். ஆண்டிகுவாவிற்கான இந்திய தூதருடன் நான் தொடர்புகொண்டு பேசினேன். சோக்ஸி ஆண்டிகுவாவில் இருந்து வெளியேறியிருக்கமாட்டார் என்று நான் சொல்லவில்லை. அவர் வெளியேறிவிட்டார் என்பதற்கான நம்பத்தகுந்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றுதான் சொல்கிறேன். சோக்ஸி விமானம் மூலம் எங்கும் செல்லவில்லை என்பது உறுதி. அனைத்து ஏர்போர்ட்டுகளிலும் விசாரிக்கப்பட்டுவிட்டது. அவர் விமானம் மூலம் செல்லவில்லை. எனவே ஒருவேளை ஆண்டிகுவாவில் இருந்து வெளியேறியிருந்தால், கப்பலில் சென்றிருக்கலாம்.
அவரை கண்டிப்பாக நாடு கடத்திவிடுவோம். இந்தியாவிற்கும் உலகிற்கும் நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மெகுல் சோக்ஸியை ஆண்டிகுவா நாடு வரவேற்கவில்லை. அவரை வெளியேற்றத்தான் விரும்புகிறோம். எனவே விரைவில் அவரை இந்தியாவிற்கு நாடுகடத்துவோம் என்று ஆண்டிகுவா பிரதமர் கஸ்டான் தெரிவித்துள்ளார்.