India - Maldives: மாலத்தீவு நோக்கி வரும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்; இந்தியாவுக்கு நெருக்கடியா?

By Dhanalakshmi GFirst Published Jan 23, 2024, 2:39 PM IST
Highlights

சமீபத்தில்தான் இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே அரசியல் ரீதியிலான சிக்கல் ஏற்பட்டு இருந்தது.

இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே அரசியல் ரீதியிலான பனிப்போர் இருந்து வருகிறது. பிரதமர் மோடி சமீபத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இருக்கும் லட்சத்தீவுக்கு சென்று இருந்தார். அங்கு கடற்கரையில் அமர்ந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் தீ பற்றிக் கொண்டது. பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். குறிப்பாக மாலத்தீவைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு போட்டியாக லட்சத்தீவை வளர்க்க பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று கூறி இருந்தனர். ஒரு சிலர் தங்களுக்கு சொந்தமானது லட்சத்தீவு என்று தெரிவித்து இருந்தனர்.

இந்த சிக்கல்களுக்கு இடையே கடந்தாண்டு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு சீனா சென்று இருந்தார். அங்கு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருந்தார். புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி இருந்தன. இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே சரியான உறவு இல்லை என்பதையும், சீனாவுடன் மாலத்தீவு நெருங்கிச் செல்கிறது என்பதையும் இந்த சந்திப்பு உறுதி செய்தது.  

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்! டெல்லியிலும் அதிர்வு!

இந்த நிலையில் தான், மாலத்தீவு கடல் பகுதியை நோக்கி சீனாவின் ஆராய்ச்சி கப்பல் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பல் ராணுவக் கப்பல் இல்லை என்றாலும் இந்தியாவை கவலை கொள்ளச் செய்துள்ளது. இந்தியாவின் ராணுவம் ரகசியம் குறித்த ஆராய்ச்சியில் சீனா ஈடுபடலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

மாலத்தீவில் அதிபராக கடந்தாண்டு நவம்பர் மாதம் முகம்மது முய்சு பதவி ஏற்றத்தில் இருந்து சீனாவுக்கு நெருக்கமாக மாலத்தீவு செல்வது வெளிப்படையாகவே தெரிய வந்தது. சீனக் கப்பல் நகர்வை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. XIANG YANG HONG 03 என்ற கப்பல் தான் மாலத்தீவு நோக்கி வந்து கொண்டுள்ளது. இதேபோன்ற கப்பலைத்தான் இலங்கையிலும் சீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி இருந்தது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சீன கப்பல் மாலத்தீவு வந்தடையும் என்று கூறப்படுகிறது. 

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு இந்தியா ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு சிகிச்சை தேவையா..? உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை கொண்டவருக்கு நேர்ந்த சோகம்..!!

click me!