சீனா தனது எதிரி நாடுகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இங்கு நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சில நாடுகள் தூதரக ரீதியாக புறக்கணித்து வருகின்றன. விளையாட்டில் அரசியல் என்பது தவறானது.
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் முதல்நாள் துவக்க விழாவில் தனது அரசியல் அதிகாரத்தை காட்டும் வகையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், புடின், இம்ரான் கான் உள்ளிட்ட 32 நாடுகளில் தலைவர்களுடன் அணிவகுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் பிப்ரவரி 4-ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன, ஒலிம்பிக் போட்டியை சாக்காக வைத்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் தனது அரசியல் பலத்தை காட்ட தயாராகி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வின் தொடக்கவிழாவில் 32 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இவர்களில் ஐரோப்பாவிலிருந்து ஆறு பேர், மத்திய ஆசியாவில் இருந்து 5 பேர், மத்திய கிழக்கிலிருந்து 3 பேர், தென் அமெரிக்காவில் இருந்து 2 பேரும் மற்றும் ஆசிய பசுபிக் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த பிரதமர் அதிபர்கள் அதில் இடம்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட் ரோஸ் அதானோம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் ஏற்பாடுகளுக்கு மத்தியில் சீனாவில் கொரோனா மற்றும் காற்று மாசுபாடு அபாயமும் அதிகரித்து வருகிறது. ஆனால் அனைத்தையும் சமாளித்து சுமுகமான முறையில் போட்டியை நடத்த வேண்டும் என்பதில் சீன அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கனவு நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இதற்காக 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு எதிர்ப்புக் குரல்களும் ஒலித்து வருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ராஜதந்திர ரீதியாக இதைப் புறக்கணித்துள்ளன. இதுதவிர உலகெங்கிலும் உள்ள மனித உரிமை குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சீனா நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பீஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டியில் பங்கெடுக்க அணிகளை அனுப்பும் ஆனால் தூதரக ரீதியிலான தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. சீனாவுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் இந்த நடவடிக்கை சீனாவுக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சீனா தனது எதிரி நாடுகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இங்கு நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சில நாடுகள் தூதரக ரீதியாக புறக்கணித்து வருகின்றன. விளையாட்டில் அரசியல் என்பது தவறானது. இந்த புறக்கணிப்புக்கான விலையை அந்த நாடுகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என எச்சரித்துள்ளது.
2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது முதல் பல்வேறு உலக நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த வைரஸ் பரவலை முன்கூட்டியே சீனா அறிந்திருந்தும் உலக நாடுகளுக்கு அதை எச்சரிக்கை தவறிவிட்டது, இதில் உள்நோக்கத்துடன் சீனா இப்படி நடந்து கொண்டது என்ற குற்றச்சாட்டையும் அந்நாடுகள் முன் வைத்துள்ளன. மேலும் வூஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து தான் இந்த வைரஸ் கசிந்திருக்கக்கூடும் என்பதால், சர்வதேச வல்லுநர் குழுவை வூஹானில் ஆய்வு நடத்த சீனா அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியது, ஆனால் அந்நாடுகள் வைத்த ஒரு கோரிக்கையைகூட சீனா ஏற்கவில்லை. சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. அந்நாடுகளின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் ஆதரவு வழங்கியிருந்தது.
இந்த நிலையில்தான் சீனாவில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துள்ளன. இந்நிலையில்தான் சர்வதேச அளவில் தனக்குள்ள அரசியல் செல்வாக்கை காட்ட அதிபர் ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார். அதற்காக பீஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட 32 நாடுகளின் தலைவர்களுடன் அவர் ஒரே மேடையில் அணிவகுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.