#UnmaskingChina:இந்த சின்னநாட்டை கூட ஏமாற்றும் சீனா..!! குத்துதே குடையுதே என கதறும் நேபாளம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2020, 7:48 PM IST
Highlights

நேபாள நாட்டுக்கு சொந்தமான 33 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும், சீனா தனது நிலப்பரப்பை அதிகரிக்க ஆறுகளின் ஓட்டத்தை திசை திருப்பி வருவதாகவும், அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்து கல்வான் பள்ளத்தாக்கை உரிமை கொண்டாடி வரும் நிலையில்,  மற்றொரு அண்டை நாடான நேபாளத்துடன் உறவு பாராட்டிக்  கொண்டே அந்நாட்டை ஆக்கிரமிக்கும்  நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட நேபாளத்தில் 33 ஹெக்டேர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய-சீன எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.  பல்வேறு காரணங்களால் இந்திய எல்லையில் படைகளை குவித்து இந்தியாவுக்கு சீனா நெருக்கடி கொடுத்து வருகிறது.  அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது படைகளை குவித்து எல்லையை கண்காணித்து வரும் நிலையில்,  இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த ஜூன்-15 அன்று இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தடுத்ததில் இரு தரப்புக்கும் இடையே மோதல்  ஏற்பட்டு அதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  சீன தரப்பில் சுமார் 45 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அல்லது  உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சீனா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களையும் வெளியிடவில்லை. இதனைத்தொடர்ந்து இருநாடுகளும் கூடுதலாக எல்லையில் படைகளை குவித்து வருவதால்,  இரு நாட்டு எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம்  ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக அறிக்கை வெளியிட்ட சீன வெளியுறவுத்துறை, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வரும் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு முழு இறையாண்மை உள்ளது எனவும், பல ஆண்டுகளாக சீன ராணுவம் அங்கு ரோந்து பணி மேற்கொண்டு வருவதாகவும் கூறி சீனா இந்தியாவிடம் வம்பு வளர்த்து வருகிறது. 

சர்வதேச அளவில் எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து வரும் சீனா, அனைத்து நாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்தி நாடு பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த முறை இந்தியாவிடம் தன் வேலையை காட்டிவரும் நிலையில், தனக்கு ஆதரவாக பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு இந்தியாவை எதிர்த்து வருகிறது. அதேவேளையில் சீனாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு விசுவாசமான கைக்கூலி என்பதை காட்டும் வகையிலும், சமீபகாலமாக நேபாளம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தனக்கு விசுவாசமாக உள்ள பாகிஸ்தானின் பல பகுதிகளை ஏற்கனவே  எழுதி வாங்கிவிட்ட சீனா, தற்போது நேபாளத்தையும் கபளிகரம் செய்த திட்டமிட்டு வருகிறது, திபெத்திற்கு சாலை அமைக்கும் சாக்கில் நேபாளத்தில் 45 ஹெக்டேர் பரபரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்திருப்பது தெரியவந்துள்ளது.  

நேபாளத்தின் வேளாண்துறை அமைச்சகம் தயாரித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ள 11 இடங்களில்  சுமார் பத்து இடங்களில் சீனா, நேபாள நாட்டுக்கு சொந்தமான 33 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும், சீனா தனது நிலப்பரப்பை அதிகரிக்க ஆறுகளின் ஓட்டத்தை திசை திருப்பி வருவதாகவும், அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக திபெத்தில் சாலை மற்றும் கட்டுமான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீனா, பாக்தரே கோலா நதி மற்றும் கர்னாலி நதியை திசை திருப்பியதால் ஹம்லா மாவட்டத்தில் மொத்தம் 10 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. திபெத்தில் கட்டுமானப்பணிகள் சின்ஜென், புர்ஜுக் மற்றும் ஜம்பு கோலா ஆகிய இடங்களில் ஆறுகள் திசை திருப்பப்பட்டதால் ரசுவா மாவட்டத்தில் 6 ஹெக்டர் அளவுக்கு நேபாளத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் சீனா தனது சாலை வலையமைப்பை பரவலாக விரிவுபடுத்திவருகிறது, இதன் காரணமாக சில ஆறுகள் பாதையை மாற்றி நேபாளத்தை நோக்கி பாய்கின்றன. இந்த ஆறுகள் படிப்படியாக நேபாள பிரதேசத்தை குறைத்துக்கொண்டிருக்கின்றன, இது தொடர்ந்தால் ஆறுகள் நேபாள நிலத்தில் அதிகப்பட்ச பகுதியை ஆக்கிரமிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மூலம் நிலத்தை குறைப்பது தொடரும் பட்சத்தில் நூற்றுக்கணக்கான  ஏக்கர்கள் திபெத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சீனா அந்த பிராந்தியங்களில் தனது ஆயுதமேந்திய படைகளை அங்கு நிறுத்தவும், அங்கு கண்காணிப்பு முகாம்களை அமைக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது என நேபாளத்தின் விவசாயத்துறை அறிக்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
 

click me!