#UnmaskingChina: மோடியை புகழ்ந்த சீன ஊடகங்கள்...!! எதற்காக தெரியுமா..??

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2020, 11:27 AM IST
Highlights

இந்தியா-சீனா எல்லையில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் சீனாவில் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் இந்திய பிரதமர் மோடியை புகழ்ந்து பாராட்டி வரவேற்றுள்ளது

இந்தியா-சீனா எல்லையில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் சீனாவில் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் இந்திய பிரதமர் மோடியை புகழ்ந்து பாராட்டி வரவேற்றுள்ளது, எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடியின் கருத்து வரவேற்கத்தக்கது எனவும் அந்நாளேடு கூறியுள்ளது.  கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன்-15)  இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இதனையடுத்து முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய இந்திய பிரதமர் மோடி, இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது என்றும், அதே நேரத்தில் தொடர்ந்து சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். அதே போன்று கடந்த 19 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய அவர்,  இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுறுவவில்லை என்றும், இந்திய பகுதிகளை கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், சீனாவின் அதுபோன்ற முயற்சிகளுக்கு ஆயுதப்படை தகுந்த பாடம் புகட்டும் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடியின் கருத்து வரவேற்கத்தக்கது என சீன ஊடகங்கள் அவரை பாராட்டியுள்ளது. குறிப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் குளோபல் டைம்ஸ், பிரதமர் மோடி அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்த கருத்து வரவேற்புக்குரியது எனக் கூறியுள்ளதுடன், "இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை, அதேபோல் இந்திய பகுதிகளை யாரும் கைப்பற்றவில்லை" என்று அவர் கூறியதையும் மேற்கேள்காட்டியுள்ள அந்த நாளேடு, இந்திய பிரதமர் இருநாட்டுக்கும் இடையேயான மோதலை கட்டுப்படுத்த விரும்புவதன் வெளிபாடு இது என கூறியுள்ளது. பிரதமர் மோடி, ஆயுதப் படைகளுக்கு முழுசுதந்திரம் அளித்திருப்பதன் நோக்கமும் அதுவே  என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சீனாவுடன் இந்தியா மோதலை ஏற்படுத்த முடியாது என்பதை அவர் நன்கு புரிந்து கொண்டுள்ளார். எனவே இருநாட்டுக்கும் இடையே பதற்றங்களை தணிக்க அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மோடி பேசிய கருத்துக்கள் பதற்றங்களை தணிக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது. 

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஷாங்காயில் உள்ள பூட்டான் பல்கலைகழகத்தின் தெற்காசிய ஆய்வுகளுக்கான மையத்தின் பேராசிரியர் லின் மின்வாங் இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் அல்லது பிற  அண்டை நாடுகளுடனான மோதலில் அது எடுக்கும் நடவடிக்கைகள் உண்மையானதாக இருக்கும், ஆனால் சீனாவை பொறுத்தவரை இது வேறு கதை எனக் கூறியுள்ளார். ராணுவ நிபுணரான வெய் டோங்சு, இந்திய ஆயுத படைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கப்படுவது குறித்து இந்திய பிரதமரின் கருத்துக்கள் இந்திய மக்களைத் திருப்திபடுத்தவும், ராணுவ துருப்புகளின் மனவுறுதியை உயர்த்தவும், உள்நாட்டு மக்களுக்கு ராணுவ வலிமையை  காட்டுவதற்காகவும் தான் என்றார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெனரல் விகே சிங் ஜூன்-15 அன்று இரவு ஏற்பட்ட மோதலில் சீனா 40 வீரர்களை இழந்துள்ளது என கூறியுள்ளார். 

 

click me!