சீனாவின் உண்மை முகத்தை அறிந்த சில சர்வதேச ஊடகங்கள் "உல்ஃப் வாரியர்ஸ்" என்ற சொற்றொடரை சீன ராஜதந்திரிகளை குறிக்க பயன்படுத்துகின்றன. ஆதாவது சீனாவை பாதுகாக்க அவர்கள் ஒநாய்களை போல தந்திர வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதே அதன் பொருள்.
இத்தனை ஆண்டுகளாக இந்தியாவின் தத்துப் பிள்ளையாக இருந்த நேபாளம் சீனாவின் கைப்பிள்ளையாக மாறியுள்ளது. அதற்குக் காரணம் நேபாளநாட்டிற்கான சீனத் தூதர் ஹவோ யாங்கி என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு யாங்கி பல்வேறு உத்திகளைக் கையாண்டு நேபாளத்தையும், அந்நாட்டு மக்களையும் தன் கைப்பாவையாக மாற்றி இருக்கிறார் என நேபாள நாளிதழ்கள் உட்பட பல சர்வதேச நாளேடுகளும் செய்தி வெளியிட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் உலகையை கதிகலங்க வைத்துவரும் நிலையில், சுமார் 14 க்கும் அதிகமான நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் சீனா, பல நாடுகளிடம் தன் இராணுவ பலத்தை காட்டி எல்லை விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. இதேபாணியில் கிழக்கு லடாக் பகுதியில் சீனா, சில இந்திய பகுதிகளுக்கும் உரிமை கோரி வருகிறது. பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளையும் தனக்கு ஆதரவாக செயல்படும் வகையில் கவர்ந்துள்ளது. எல்லை விரிவாக்க மனப்போக்கில் உள்ள சீனா அதை நடைமுறைப்படுத்தும் வகையில் தனது நாட்டு தூதர்களை அதில் நுட்பமாக பயன்படுத்தி வருகிறது. தனக்கு சாதகமான நாடுகளுடன் பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அந்நாடுகளை தன் வலையில் வீழ்த்துவது சீனாவின் பிரதான திட்டமாக இருந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் விமர்சிக்கின்றன.
சீனாவின் உண்மை முகத்தை அறிந்த சில சர்வதேச ஊடகங்கள் "உல்ஃப் வாரியர்ஸ்" என்ற சொற்றொடரை சீன ராஜதந்திரிகளை குறிக்க பயன்படுத்துகின்றன. ஆதாவது சீனாவை பாதுகாக்க அவர்கள் ஒநாய்களை போல தந்திர வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதே அதன் பொருள். சீனா, இந்திய எல்லையில் அத்துமீறி வரும் நிலையில், தனக்கு ஆதரவாக பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை பேச வைத்திருப்பதும் இந்த வகையான தந்திரமே என்கின்றனர். இந்தியாவின் பிடியிலிருந்த நேபாளத்தை தன் வலையில் வீழ்த்துவதற்கு அந்நாட்டின் பெண் தூதர் ஹவோ யாங்கி, பல்வேறு உத்திகளைக் கையாண்டார் என வெளிநாட்டு ஊடகங்களின் தெரிவிக்கின்றன. நேபாள நாட்டிற்கான சீன தூதராக பதவியேற்ற கொஞ்ச காலத்திலேயே ஹவோ யாங்கி நேபாளத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்தியாவின் கலாச்சார மடியில் தவழ்ந்த நேபாளத்தை சீனாவின் ஆதரவு நாடாக மாற்ற வேண்டுமென்று அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்டை அவர் கனகச்சிதமாக செய்து முடித்ததாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக இந்தியாவுக்கும் நேபாளத்துக்கு இடையேயான எல்லைப் பிரச்சனையை ஹவோ யாங்கி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர். இந்தியா-நேபாளம் இடையே வலுவான கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகள் இருந்தபோதிலும், எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நம்பிக்கை இல்லாதிருந்ததை புரிந்து கொண்ட அவர், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் என்கின்றனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை விரிசலாக்கியதன் ஆகப்பெரிய பங்கு ஹவோ யாங்கிக்கே உண்டு. அதற்காக தனது டுவிட்டர் பக்கத்தை அவர் பயன்படுத்தியுள்ளார். சீனாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் சீன தூதர்கள் அதை தங்களுக்கு சாதகமான காரியத்திற்காக சிறப்பாக கையாண்டு வருகின்றனர் என சர்வதேச ஊடகவியலாளர்கள் கூறிகின்றனர். அந்த வகையில் ஹவோ யாங்கி சீனா குறித்து நேபாள மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். அதன் மூலம் கிட்டத்தட்ட 40 ஆயிரத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை அவர் பெற்றுள்ளார், சீனாவுக்கும் நேபாளத்துக்கு இடையேயான உறவு எவ்வளவு ஆழமானது என்பதை அவர் அடிக்கடி நேபாள மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். நேபாள மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறுவது, அம்மக்களைக் கவரும் வகையில் விதவிதமாக தனது புகைப்படங்களை கலைநயத்துடன் வெளியிடுவது, அம்மக்களின் டுவிட்டுக்கு ரீடுவிட் செய்வது என பரஸ்பர நம்பிக்கை பெற்றுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றின் போது நேபாளத்திற்கு உதவி செய்வதை போல பல செயல்களில் ஈடுபட்டு அதை அதிகளவில் விளம்பரப்படுத்தியது போன்ற செயல்களின் மூலம் அவர் நேபாளிகளிடம் நெருக்கமானார் எனவும், நேபாளம் மொழியை கற்றுக் கொண்டு அம்மக்களை கவரும் வகையில் டுவிட்செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. சீனாவும் நேபாளமும் ஆறுகள், மலைகளால் இணைக்கப்பட்ட நட்பு நாடுகள் என்றும் அந்த உறவு பிரியாமல் இருக்கட்டும் என்றும் கவிநயத்துடன் டுவிட் செய்வது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளையும் ஐக்கியபடுத்தும் அவரின் முயற்சிக்கு நன்கு கை கொடுத்ததாக கூறப்படுகிறது. நேபாளத்துடன் இந்தியாவின் ராஜதந்திரம் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் ஹவோ யாங்கியின் நடவடிக்கைகள் நேர்மாறானது என கூறப்படுகிறது. மேலும் நேபாள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக பிரித்ததில் அவர் முக்கிய பங்காற்றினார் எனவும், அவர் பிரதமர் ஷர்மா ஓலியை முழுவதுமாக கட்டுப்படுத்தக்கூடியவராகவும் மாறினார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலில்போதே இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை ஷர்மா ஓலி தொடங்கினார், அதன் பின்னணியில் இருந்தது ஹவோ யாங்கியே எனவும் உறுதியாக கூறப்படுகிறது.
ஹவோ யாங்கி எப்போதும் நேபாளத்துக்கு அனுசரணையாகவும், அனுகூலமாகவும் இருப்பதாகவே தன்னை காட்டிக்கொண்டுள்ளார் என நேபாள செய்தித்தாள்களும் அவரை விமர்சித்துள்ளன. அதேபோன்று வுஹான் நகரில் கொரோனா பரவியபோது நேபாள மாணவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளவும், அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அவர் அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டு, பின்னர் மாணவர்களை பேட்டி கண்டு அதை சமூக வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டார். இதன் மூலம் நேபாள மக்கள் மத்தியில் அதிக நெருக்கத்தை அவர் வளர்த்துக் கொண்டார் எனவும், நேபாள நாட்டின் நம்பிக்கையுள்ள நண்பன் சீனாவே என காட்டி நேபாள அரசை சீனாவின் கைப்பாவையாக அவர் மாற்றினார் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவுடன் சீனாவின் மோதல் போக்கு திடீரென நடந்தவை அல்ல என்பதுடன், பல மாதங்களுக்கு முன்பாகவே இந்தியாவுக்கு எதிரான திட்டதில் சீனா இறங்கி விட்டது என்பதையே ஹவோ யாங்கியின் நடவடிக்கைகள் உறுதி செய்வதாக உள்ளன.