
சீன ராணுவத்தில் 3 லட்சம் வீரர்கள் குறைக்கப்படுவதாக அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தார். இதையடுத்து, வதந்திகளை நம்ப வேண்டாம் என சீன ராணுவம் அறிவித்துள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததால், பல சீர்திருத்த நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது. உலகின் மிகப் பெரிய சீன ராணுவத்தில் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர். இதில், லட்சம் வீரர்கள் குறைக்கப்படுவதாக சீன அதிபர் ஜின்பிங் கடந்த மாதம் அறிவித்தார்.
வீரர்களுக்கு பதில் ராணுவத்தில் அதிகளவில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு. பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கான சலுகைகள் பறிபோகும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதனால், ஏற்கனவே பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் தலைநகர் பீஜிங்கில் கடந்த 11ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘‘ராணுவத்தில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விரோத சக்திகள் ஆன்லைனில் வதந்திகள் பரப்பி வருகின்றன. பணியில் இருந்து விடுவிக்கப்ட்ட ராணுவ வீரர்களின் சலுகைகள் குறைக்கப்படும் என்பதெல்லாம் ஆதாரமற்ற கட்டுக் கதைகள்.
சீர்திருத்த நடவடிக்கையில் அவர்கள் வீண் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த வதந்திகளை வீரர்கள் நம்ப வேண்டாம். பணியில் இருந்து விடுவிக்கப்படும் ராணுவ வீரர்களின் நலன்கள் காக்கப்படும் என அரசு தொடர்ந்து உறுதி அளித்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.