கஞ்சா பயன்பாட்டுக்கு கனடா அரசு தற்போது சட்டப் பூர்மாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இனி கனடாவில் கஞ்சா செடி வளர்க்கலாம் என்றும், கஞ்சா புகைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் போதைப்பொருள்களில் ஒன்றான கஞ்சா பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா செடிகளை பயிரிடுவது, விற்பனை செய்வது மற்றும் அதனை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
ஆனாலும் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் போலீசாரின் ஆதரவோடு கஞ்சா விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கனடாவில் கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கஞ்சா வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது குற்றச்செயல் என கடந்த 1923–ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2001–ம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கப்பட்டது..
அதே சமயம் அதனை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை நீடித்தது. ஆனாலும் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனவே அங்கு கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இதையடுத்து முறையான அனுமதியுடன் கஞ்சா செடிகளை வளர்க்கவும், கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவும் சட்டம் இயற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பான மசோதா மீது கனடா செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், எதிராக 29 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதிக வாக்குகளை பெற்றதால் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
கஞ்சா செடிகளை வளர்ப்பது, வினியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது இந்த சட்டத்தின் சாராம்சம் ஆகும்.
இந்த சட்டத்துக்கு அந்நாட்டின் அரசியல் அமைப்பின் ஒப்புதல் இந்த வாரத்துக்குள் கிடைக்கும் என தெரிகிறது. அதனைத்தொடர்ந்து இந்த சட்டம் எந்த தேதியில் அமலுக்கு வரும் என்பதை அரசு அறிவிக்கும்.
உலகிலேயே, உருகுவே நாட்டுக்கு பிறகு கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் 2–வது நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.