பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களை ஒடுக்க வேண்டும்… பிரிக்ஸ் மாநாட்டில் முதல்முறையாக தீர்மானம் ;இந்தியாவுக்கு சீனா  எதிர்ப்பு

First Published Sep 4, 2017, 10:19 PM IST
Highlights
brics conference...pm modi went to china...pakistan


 

சீனாவில் நடந்து வரும் பிரிக்ஸ் மாநாட்டில், பாகிஸ்தானின்  ‘லஷ்கர் இ தொய்பா’, ‘ஜெய்ஷ் இ முகமது’ ஆகிய தீவிரவாத குழுக்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்போர், செயல்கள் புரிவோர் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பிரிக்ஸ் மாநாடு

சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் வருடாந்திர மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் முதல்நாள் முடிவில் 43 பக்கங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

கவலை

  தலிபான், ஐ.எஸ்.அமைப்பு, அல்-குவைதா, அதன் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகளான கிழக்கு துருகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், உஸ்பெகிஸ்தான்இஸ்லாமிய இயக்கம், தி ஹக்கானி நெட்வொர்க், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இமுகமது, தெஹரீக் இ தலிபான் பாகிஸ்தான் , ஹிஸ்ப் உத் தஹிர் ஆகிய தீவிரவாத அமைப்புகள் பிராந்தியத்தில் பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கி வருகிறது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

கண்டனம்

தீவிரவாதத்தை எந்த நாடு வளர்த்தாலும், யார் ஆதரவு கொடுத்தாலும் அதை கடுமையாகக் கண்டிக்கிறோம். அதற்கு அவர்கள் பொறுப்பு ஏற்று, பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.  எந்த விதமான தீவிரவாத செயலுக்கும் யாரும் நியாயம் கற்பிக்க முடியாது என கூறப்பட்டது.

தீவிரவாதத்தை தடுப்பதும், அதற்கு எதிராகப் போராடுவதும் ஒவ்வொரு நாடு அரசுகளின்  பொறுப்பாகும். தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச அளவில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது, சர்வதேச சட்டவிதிகள், கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்படுத்துவது, நாடுகளின் இறையான்மைக்கு சமத்துவம் அளித்தல், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல் போன்றவை வலியுறுத்தப்பட்டது.

தடுக்க வேண்டும்

தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட அனைத்து நாடுகளும் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக இருத்தல், ஆட்சேர்ப்பை தடுத்தல், தீவிரவாதிகள் இடம்விட்டு நகர்தலை தடுத்தல், நிதி உதவியைத் தடுத்தல், சட்ட விரோத பணப்பரிமாற்றம், ஆயுத சப்ளை, போதைமருந்து கடத்தல், குற்றச்செயல்களை தடுத்தல், தீவிரவாதகள் வாழும் இடங்களை அழித்தல், சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துதலை தடுத்தல் போன்றவற்றை உலக நாடுகள் செய்ய வேண்டும்.

மேலும், ஆப்கானிஸ்தானில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வடகொரியா நடத்தி வரும் அணு ஆயுத சோதனைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டது.

முதல் முறையாக பாகிஸ்தான்

இந்த மாநாடு குறித்து கிழக்கு நாடுகளுக்கான வௌியுறவுத்துறை செயலாளர் பிரீத்தி சரண் நிருபர்களிடம் கூறுகையில், “ பிரிக்ஸ் மாநாட்டில் முதல்முறையாக தீவிரவாத அமைப்புகளின்  பெயர்கள் குறிப்பிடப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை குறிப்பிட்டது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை, தீவிரவாதம் என்பது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதை சர்வதேச சமூகம் கூட்டாக இணைந்து  தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் யாரும் இரட்டை நிலைப்பாடு எடுக்க முடியாது. நல்லவர்கள், கெட்டவர்கள் என தீவிரவாதிகளை பாகுபடுத்த முடியாது. எப்படியானாலும் அது தீவிரவாதம்தான்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் சீர்திருத்தங்கள் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  பிரதமர் மோடி வலியுறுத்தினார்’’ என்று தெரிவித்தார்.

சீனா கடும் எதிர்ப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் குறித்து இந்தியா பேசியதற்கு சீன கண்டனம் தெரிவித்தது. அந்த நாட்டின் வௌியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பாடுகளில் சில கவலை தரும் விஷயங்கள் இருக்கிறது. ஆனால், பிரிக்ஸ் மாநாட்டில் அந்த விஷயத்தை குறித்து இந்தியா பேசுவது சரியானது அல்ல’’ என்றார்.

கடந்த ஆண்டு கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் குறித்து குறிப்பிட்ட சீனா அனுமதிக்கவில்லை. மேலும், காஷ்மீரில் உரி ராணுவமுகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் பிரிக்ஸ் மாநாடு நடந்தும் அது குறித்து குறிப்பிட சீனா அனுமதிக்கவில்லை. மேலும், பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. முயற்சி செய்தும், அதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

tags
click me!