மனிதர்களின் பணிச்சுமையை செயற்கை நுண்ணறிவு குறைப்பதால், அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என கோடீஸ்வர தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்படுவது செயற்கை நுண்ணறிவு. இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட போதே, வேலை இழப்புகள் பற்றி பலரும் அச்சம் தெரிவித்தனர். இன்னமும் தெரிவித்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கருவிகள் தங்கள் வேலையைத் திருடக்கூடும் என்ற அச்சம் பணிபுரியும் நிபுணர்களிடையே தொடர்ந்து உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் புத்தகங்களை எழுதவும், விளக்கப்படங்களை உருவாக்கவும், தானியங்கி வாடிக்கையாளர் சேவை தளங்களை அமைக்கவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால், ஆங்காங்கே வேலை இழப்புகள் பற்றிய பேச்சுகளை கேட்க முடிகிறது.
ஆனால், பெரும் கோடீஸ்வரர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் என பலரும் செயற்கை நுண்ணறிவால் ஆபத்து இல்லை என்றே கூறி வருகின்றனர். அந்த வகையில், மனிதர்களின் பணிச்சுமையை செயற்கை நுண்ணறிவு குறைப்பதால், அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என கோடீஸ்வர தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோவாவின் What Now? போட்காஸ்ட் நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் பற்றி பில் கேட்ஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அன்றாடப் பணிகளின் சுமையை இயந்திரங்கள் சுமக்கும்போது மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை என்ற கருத்தை முன்வைத்தார்.
மேலும், தனது வாழ்க்கையின் இரண்டு பத்தாண்டுகளாக அதாவது 18 முதல் 40 வயது வரை தனது நிறுவனத்தை வெற்றிகரமாக உருவாக்குவதில் வெறி கொண்டிருந்ததாகவும், இப்போது, 68 வயதில், வாழ்க்கையின் நோக்கம் வேலைகளைச் செய்வது மட்டுமல்ல என்பதை உணர்ந்துள்ளதாகவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டிய சமூகத்தை நாம் பெற்றால் அதுவும் சரிதான் எனவும் பில் கேட்ஸ் கூறினார். “இயந்திரங்களால் அனைத்து உணவுகளையும், மற்ற பொருட்களையும் செய்ய முடியும். அதனால், மனிதர்களாகிய நாம் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. “என்று பில் கேட்ஸ் கூறினார்.
முன்னதாக, தனது முந்தைய நேர்காணல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் மற்றும் நன்மைகள் இரண்டையும் பில் கேட்ஸ் எடுத்துக்காட்டியுள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு: மியாட் மருத்துவமனை அறிக்கை!
கேட்ஸ்நோட்ஸில் பேசிய பில் கேட்ஸ், மிகவும் உண்மையான ஆனால் நிர்வகிக்கக்கூடியது என்று செயற்கை நுண்ணறிவை அழைத்தார். மேலும், தவறான தகவல், டீப் ஃபேக், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், வேலை சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கல்வியின் தாக்கம் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தலாக அவர் கணக்கிடுகிறார்.
“ஒரு புதிய தொழில்நுட்பம் தொழிலாளர் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது இது முதல் முறை அல்ல. செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொழில்துறை புரட்சியைப் போல வியத்தகு முறையில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அது நிச்சயமாக கணினியின் அறிமுகத்தைப் போலவே பெரியதாக இருக்கும்” என பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்குத் தெளிவாகத் தெரிந்த மற்றொரு விஷயம் என்னவென்றால், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் சிலர் நினைப்பது போல் கடுமையானது அல்லது மற்றவர்கள் நினைப்பது போல் ரம்மியமானதும் அல்ல. அதில் உள்ள ஆபத்துகள் உண்மையானவை, ஆனால் அவற்றை நிர்வகிக்க முடியும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என்றும் பில் கேட்ஸ் மேலும் கூறினார்.